வினையின் விளைவு

216 0

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு தனது அரசியலை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்ஷ, பெருத்த அவமானத்தோடு அதிகாரத்தில் இருந்து இறக்கி விடப்பட்டிருக்கிறார்.

அலரி மாளிகையில் இருந்து உசுப்பி விடப்பட்ட ஆளும்கட்சியினர், ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’வில் நடத்திய வெறியாட்டத்துக்குப் பின்னர், ஏற்பட்ட அழுத்தங்களால், அவர் பதவி துறக்கும் நிலை ஏற்பட்டது.

அவர் பதவியில் இருந்து விலகல் கடிதத்தை, ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தாலும், அவர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார் என்பது தான் உண்மை.

அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டு, திருகோணமலை கடற்படைத் தளத்துக்குள் பாதுகாப்பாக ஒளித்து வைக்கப்படும் அளவுக்கு அவரது நிலை மாறிப் போனது.

இது அவர் தனக்குத் தானே விதைத்துக் கொண்ட வினை. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்குக்கு முற்றிலும் பொருந்தும்

அவரது தவறுகள் தான், அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது. அவரே தான் இந்த நிலையை உருவாக்கினார்.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் தான், அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதன் பலாபலன்களை அவர் மாத்திரமன்றி, அவரைச் சூழ்ந்திருக்கின்றவர்களும் இன்று அனுபவிக்கிறார்கள்.

மஹிந்தவின் தந்தை, டிஏ.ராஜபக்ஷ, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்.

இரண்டாவது நிலைத் தலைவர்களில் ஒருவராக அவர் இருந்த போதும், பண்டாரநாயக்கவின் கொலைக்குப் பின்னர், தற்காலிக பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை.

தஹநாயக்கவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர், அது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கைக்கு மாறியது.
இதனால், ராஜபக்ஷவின் முதல் தலைமுறையால் நாட்டுக்கும் கட்சிக்கும் தலைமை தாங்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

1967இல் டி.ஏ.ராஜபக்ஷவின் மரணத்தை அடுத்து, 1970இல் மஹிந்த ராஜபக்ஷ பெலியத்தை தொகுதியில் களமிறங்கி முதல் அரசியல் வெற்றியைப் பெற்றார்.

இறுதியில், அலரி மாளிகைக்குள்ளேயும், ஜனாதிபதி மாளிகைக்குள்ளேயும், அவரால் நுழைய முடிந்தது.</p>
அதற்காக அவர் நேர்த்தியாக தனது அரசியலை முன்னெடுத்தார். தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.அது தான் அவரது பலம்.

பண்டாரநாயக்க பரம்பரையின், முடிவுக்காலத்துக்குப் பின்னர், தனது குடும்பத்தையும், நெருங்கிய வட்டத்தையும் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

அரை நூற்றாண்டு அரசியலைக் கண்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடைசி இரண்டரை ஆண்டுகள் தான் பெரும் சறுக்கலாக அமைந்தது.

2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி கண்டு அலரி மாளிகைகயை விட்டு வெளியேறி, ஹெலிகொப்டரில் மெதமுலானவுக்குச் சென்று இறங்கிய போது, அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அம்பாந்தோட்டையின் கிராமங்களில் இருந்து மாத்திரமன்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரைத் தேடி ஆதரவாளர்கள் படையெடுத்துச் சென்று ஆறுதல் கூறினார்கள்.

அந்த ஆறுதலுடன், அரசியலுக்கு விடை கொடுத்திருந்திருப்பாரேயானால், அவர் அவமானங்களுடன் ஓடி ஒளிக்கும் நிலை வந்திருக்காது.

அரசியல் ஆசையும், தனது குடும்பத்தை மீண்டும் அதிகாரத்தில் நிலைப்படுத்தும் கனவும் அவரை விடாமல் துரத்தியது.

அவரது சேர்க்கைகளும், தங்களின் நலன்களுக்காக அவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.</p>
<p>விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்ற, தனித்து அரசியலில் தேற முடியாதவர்கள், மஹிந்தவை ஏணியாகப் பயன்படுத்தினால் மட்டும் தலையெடுக்க முடியும் என்று நம்பினார்கள்.

அவரின் தோளில் சவாரி செய்வதற்காக அவரை உசுப்பேற்றி உசுப்பேற்றி, கடைசியில் நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டு, கழன்று போனார்கள்.

>மஹிந்தவை மீள அரசியலுக்கு கொண்டு வந்தவர்கள் தான், அவரை வீட்டுக்குப் போ என்று கூறினார்கள். அது தான் அவருக்கு உச்சக்கட்ட அவலம்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவாகிய போது, அவரைச் சுற்றியிருந்தவர்கள் அரசியல் அனுபவம்மிக்கவர்கள். அவர்களின் சேர்க்கையும் வழிப்படுத்தலும், மஹிந்தவின் எழுச்சிக்கு துணை நின்றது.
ஆனால், அவரது இரண்டாவது அரசியல் வாழ்வில் அவருக்குப் பின்னால் இருந்தவர்கள், அவரை தவறாக வழிநடத்தினார்கள்.

வன்முறைகளில் நம்பிக்கை கொண்ட அவர்கள், மஹிந்த ராஜபக்ஷவை தங்களின் சொல்லுக்கு ஆடுபவராக மாற்றினர்.

அரைநூற்றாண்டு அரசியல் அனுபவத்தைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, 2019இல் இருந்து எடுத்த முடிவுகளும், விளைவுகளும் பாரதூரமானவையாக அமைந்தன.

அவை ஆரம்பத்தில் அவரது குடும்ப அதிகாரத்துக்கு துணையாக அமைந்த போதும், இறுதியில் பெரும், நாசங்களுக்கு வித்திட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுத்த முடிவு, பஷில் ராஜபக்ஷவை அதிகாரத்துக் கொண்டு வர எடுத்த நடவடிக்கை எல்லாமே, மஹிந்தவின் அரசியல் வாழ்வின் கரும்புள்ளிகள்.
<p>அவை தான், மஹிந்தவுக்கு நெருக்கமான பலரை தூர விலக்கி வைத்தது. அவரது கண்ணை மறைக்கும் பல முடிவுகளை எடுக்கத் தூண்டியது.

விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் பதவி விலகுவது தான் அரசியல் நெருக்கடிக்கு ஒரே வழி என்று அழுத்தம் கொடுத்தார்.

அதன் மூலம் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது என்று மஹிந்த இழுத்தடித்தார்

எவ்வாறாயினும், 9ஆம் திகதி அவர் பதவி விலகுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றியிருந்தால், ஓரளவுக்கு கௌரவமாக சொந்த ஊருக்குச் சென்றிருக்க முடியும்.

ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. அவரைச் சுற்றியிருந்தவர்களும் அதனைச் செய்ய விடவில்லை.</p>
<p>பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை வன்முறையின் மூலம், நீக்க முயன்றார். தனது அரசியல் பலத்தைக் காட்டி, கோட்டாபய ராஜபக்ஷவை மிரட்ட முயன்றார்.

அதற்காக அவர் அலரி மாளிகையில் கொண்டு வந்து இறக்கி விட்ட ஆதரவாளர்கள் மத்தியில், தான் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டேன் என்றும் முழக்கமிட்டார்.

அதற்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால், அரசியல் நெருக்கடி ஏற்படும் என்றும், எனவே அவரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்க கூடாது என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாகவும் கூறியதுடன், பதவி விலகலை தடுக்க போரைத் தொடங்குங்கள் என்றும் தம் பரிவாரங்களுக்கு கட்டளையிட்டார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ,.

அதன் பின்னர் தான் அலரி மாளிகைக்குள் இருந்து வெறியாட்டம் தொடங்கியது.

அதுவே, பதவியை விட்டு விலகமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த மஹிந்தவை, தலை தப்பினால் போதும் என்று தப்பியோடும் நிலைக்கு கொண்டு வந்தது.

2015 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், முடிவுகள் முற்றாக வெளிவர முன்னரே, மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை ஒப்புக்கொண்டு அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

அதனை அவர் மேடைகளில் பெருமையாகவே கூறி வந்தவர். பெரும்பான்மை ஆதரவு தனக்கு இல்லை என்றால், ஆட்சியில் இருக்கமாட்டேன் என்றும் அவர் அண்மையில் கூட குறிப்பிட்டார்.

ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது, அதிகாலையில் அவரது தோல்வி உறுதியாகிக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது. நள்ளிரவில் அப்போதைய பாதுகாப்புச் செயலரான தற்போதைய ஜனாதிபதியும், பாதுகாப்பு படைத் தளபதிகளும் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டனர்.
அதனால் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் பதற்றமடைந்தனர். ; இராணுவத்தின் துணையுடன் ஆட்சியை தக்கவைக்கும் சதி முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது.

ஆனால் அதனை ராஜபக்ஷ தரப்பு முற்றாக மறுத்தது. அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த ஜோன் கெரி, மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் எச்சரித்ததை அடுத்தே, அவர் பதவி விலக முடிவு செய்தார் என்ற தகவல்கள் வெளியாகின.

அதற்குப் பின்னரே ரணில் விக்ரமசிங்க அதிகாலையில் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு அமைதியான முறையில் அதிகாரத்தை கைமாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதுபோல இந்த முறை வெளியில் இருந்து யாரும் மஹிந்தவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் அவர் அலரி மாளிகையில் இருந்தபடி வன்முறையை கட்டவிழ்த்து அதிகாரத்தை நிலைப்படுத்த முயன்றார்.

அதுதான் அவர் அரசியல் வரலாற்றில் செய்த இரண்டாவது பெரும் தவறு. அது அவரது மட்டுமன்றி அவரது குடும்பத்தினது அரசியலையும் சூனியமாக்கியிருக்கிறது.

இப்போது அவர் மெதமுலானவுக்கும் தப்பியோட முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டது. அப்போது அவருக்கு ஆறுதல் கூற வந்தவர்கள், இப்போது தீப்பந்தத்துடன் காத்திருக்கிறார்கள்.

 சத்ரியன்