ரணில் – ராஜபக்ஷவினரின் பலிக்கடா

197 0

மஹிந்த ராஜபக்ஷ தனது தலையில் தானே மண் அள்ளிக் கொட்டிக் கொண்ட நிலையில், திடீர் அதிஷ்டசாலியாக மாறியிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க.

மைத்திரி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த அவரை விட்டு, சஜித் தலைமையிலான பெரும்பாலானவர்கள் உடைத்துக் கொண்டு வெளியே சென்ற பின்னர், வெறும் கையுடன் ஐ.தே.க.வின் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் ரணில்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போன அவரது கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக மிகவும் தந்திரமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்திருந்தார்.

அந்த நகர்வு தான் அவர் இன்று பிரதமராவதற்கு பெரும் துணையாக அமைந்திருக்கிறது. நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிய போதே, ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். அப்போது, அவரது ஆலோசனைகளை ராஜபக்ஷவினர் செவிமடுக்கவில்லை.

எனினும், நிலைமைகள் இறுகத் தொடங்கியதும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ திட்டமிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கவில்லை. அது தனது பிடியைத் தளர்த்தி விடும் என்ற அச்சத்தை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது.

எனினும், காலிமுகத்திடலில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் வரை மட்டுமே, அவரால் அந்தப் பதவியில் நிலைத்திருக்க முடிந்தது. பதவி விலகிய பின்னர் அலரி மாளிகைக்குள் சிக்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அதிகாலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு, திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் தான், சரியாக மூன்று நாட்களுக்குப் பின்னர், நாட்டின் பிரதமர் பதவிக்கு ரணில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மூன்று நாட்களிலும், பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் முதலில் ஏற்கவில்லை.

அவரும், ஜே.வி.பி.யும், ஜனாதிபதி கோட்டா முதலில் பதவி விலக வேண்டும் என்று, வலியுறுத்தினர்.
ஆனால், பதவி விலகுவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டு, ஒரு ஆட்சிமாற்ற விம்பத்தை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தினார்.

அதனால் தான், ரணிலை பிரதமராக்கும் முயற்சி தொடங்கியதும் விழுந்தடித்துக் கொண்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பதவியேற்கத் தயார் என அறிவித்த சஜித்தின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தால், அது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும் குடைச்சலாக இருந்திருக்கும்.

ஏற்கனவே அவர், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு கைமாற்றத் தயார் என்று கூறியிருந்தார்.

அதனால், தார்மீக அடிப்படையில், பிரதமரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இவ்வாறான நிலையில் தான், சரியாக மூன்று நாட்களுக்குப் பின்னர், நாட்டின் பிரதமர் பதவிக்கு ரணில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மூன்று நாட்களிலும், பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் முதலில் ஏற்கவில்லை.

அவரும், ஜே.வி.பி.யும், ஜனாதிபதி கோட்டா முதலில் பதவி விலக வேண்டும் என்று, வலியுறுத்தினர். ஆனால், பதவி விலகுவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டு, ஒரு ஆட்சிமாற்ற விம்பத்தை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தினார். அதனால் தான், ரணிலை பிரதமராக்கும் முயற்சி தொடங்கியதும் விழுந்தடித்துக் கொண்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பதவியேற்கத் தயார் என அறிவித்த சஜித்தின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தால், அது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும் குடைச்சலாக இருந்திருக்கும்.

ஏற்கனவே அவர், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு கைமாற்றத் தயார் என்று கூறியிருந்தார்.

அதனால், தார்மீக அடிப்படையில், பிரதமரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் சஜித்துடன் இணைந்து பணியாற்றுவது கோட்டாவுக்கு கடினமானதாக இருந்திருக்கும்.
அதனால் தான், ராஜபக்ஷவினர் தங்களுக்குச் சாதகமானவரான ரணிலைப் பிரதமராக்கும் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கின்றனர்.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன. சஜித்தை விட ரணிலுக்கு மேற்குலக செல்வாக்கு அதிகம். அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுபவர்.

ரணில் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே வாழ்த்து தெரிவித்து அதனை உறுதிப்படுத்தியிருந்தார் அமெரிக்க தூதுவர்.

ரணிலைப் பிரதமராக்குவதன் மூலம், மேற்குலகத்தின் பொருளாதார ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம், பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கு அது முக்கியமான தேவையாக இருந்தது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் எந்தப் பலமும் கிடையாது. அதனால் அவர், ஜனாதிபதி கோட்டாவை எந்த வகையிலும் மிரட்ட முடியாது. பதவி விலகப் போவதாக அச்சுறுத்த முடியாது.

ஏனென்றால், அவரை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தான் ஆட்டி வைக்கப் போகின்றனர். பாராளுமன்றில்113 பேரின் ஆதரவு இருந்தால் தான், ரணிலால் தப்பிப் பிழைக்க முடியும்.

ஒப்பீட்டளவில் சஜித்தை விட ரணில், பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்துக்கும், ராஜபக்ஷவினரின் அரசியலுக்கும் அச்சுறுத்தல் குறைந்தவர்.

எனவே, அவரை வைத்துக் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கின்றனர் ராஜபக்ஷவினர்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், ராஜபக்ஷவினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது, அந்த வழக்குகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பவர் என்ற குற்றச்சாட்டு ரணில் மீது இருந்து வந்தது.

அதுபோலவே, நல்லாட்சி அரசில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், அதில் அவரைச் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்தவர்கள் ராஜபக்ஷவினர் தான்.

ஆக, ஒருவரை ஒருவர் பாதுகாப்பதில் ரணிலும், ராஜபக்ஷவினரும், இணை பிரியாதவர்கள். அதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு.

பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்த ராஜபக்ஷவினர், அதன் காரணமாக தாங்கள் மக்களால் துரத்தப்படுவோம் என்பதை கற்பனை கூடச் செய்திருக்கவில்லை.

பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக மாறி இப்போது, ராஜபக்ஷவினரையோ வேண்டாம் என்று ஒதுக்கும் நிலை வந்திருக்கிறது.

இந்தநிலையில் அவர்களுக்கு உள்ள ஒரே பிடி, ஜனாதிபதி பதவி தான். அதனையும் இழந்து விட்டால், தாங்கள் தலையெடுக்க முடியாத நிலைக்குள் தள்ளப்படுவோம் என்பதை அவர் நன்கறிவார்கள்.

அதனால் தான், தங்களுக்கு வசதியான ரணில் விக்ரமசிங்கவை வைத்து புதிய ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போதைய நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகியிருக்கிறார். அமைச்சர்கள் பதவிகளை ராஜபக்ஷவினர் இழந்திருக்கின்றனர்.

ஆனால், அவர்களின் அதிகாரம் முற்றாக இழந்து விட்டது என கூற முடியாது. அவர்கள் இப்போது மறைந்திருந்து இருந்து கொண்டு, ரணிலை வைத்து காய்களை நகர்த்துகின்றனர்.

ஒரு பக்கத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி நடக்கிறது. ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அதனை செய்து முடித்தாலும் சரி, செய்வதில் தோற்றுப் போனாலும்  சரி, அது ராஜபக்ஷவினருக்குத் தான் சாதகமாக மாறும்.

ஏனென்றால், ஒருவேளை ரணில் அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகவேனும் வெற்றி கொள்ளும் நிலை ஏற்பட்டால், அதற்குத் தாங்களே இடமளித்தோம், தாங்களே ஆதரவளித்தோம் என்று அவர்கள் கூறுவார்கள்.

அந்த முயற்சி தோற்றுப் போனால், தாங்கள் விட்டுக் கொடுத்தும், யாரும் ஆட்சியமைக்கவும் முன்வரவில்லை. ஆட்சியமைக்க முன்வந்தவரும், அதில் தோற்றுப் போய் விட்டார் என்று ரணிலை கைகாட்டி விட்டு நழுவிக் கொள்வார்கள்

ஆக, இப்போதைய நிலையில் ராஜபக்ஷவினர் மீதும் மொட்டு மீதும் உள்ள மக்களின் எதிர்ப்பும், வெறுப்பும் தணிய வேண்டுமானால் ஒரு தற்காலிக இடைவெளி தேவை.

அந்த தற்காலிக இடைவெளியை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் ரணில் விக்ரமசிங்க

மக்களின் கோபத்தையும், கொந்தளிப்பையும், திசை திருப்பி, போராட்டங்களை மழுங்கடிக்க துணைபோயிருக்கிறார் அவர்.

ஏற்கனவே ஐந்துமுறை அரைகுறைப் பதவிக்காலங்களில் பிரதமராகப் பதவி வகித்தவர், எந்தளவு அடித்தாலும் –தாங்கிக் கொள்ளக் கூடிய ‘வடிவேலு ரகம் ரணில்

அவரைப் பலிக்கடா ஆக்கிக் கொண்டு, ராஜபக்ஷவினர் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயார்படுத்துகிறார்கள். அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவும் சாதாரணமானவர் அல்ல.

நல்லாட்சி அரசின் காலத்தில், மைத்திரியை ஆட்டிப் படைத்து வெறுப்பூட்டியவர். அதனால் தான், 2018இல், மஹிந்தவை, பிரதமராக்கும் முடிவுக்கே மைத்திரி வந்திருந்தார்.

இனிமேல் ரணிலைப் பிரதமர் ஆக்கமாட்டேன் அவ்வாறான சூழ்நிலை வந்தால், ஜனாதிபதி பதவியை விட்டு போவேன் என்று கூறிய மைத்திரிக்கு முன்பாகவே, மீண்டும் பதவியேற்கும் நிலையை ஏற்படுத்தியவர்.

இலங்கை அரசியலில் ‘நரி’ என்று வர்ணிக்கப்படும், ஜே.ஆரின் வாரிசு அவர். அரசியல் தந்திரங்களையும், சூட்சுமங்களையும் கையாளும் தேர்ச்சி பெற்ற ரணில், இப்போது பாராளுமன்றத்தில் ஒற்றை ஆளாகத் தான் நிற்கிறார்.

அவர் தன்னைப் பலப்படுத்திக கொள்ள வேண்டுமானால், யாருக்கும் அடிபணியாமல் இருக்க வேண்டுமானால், நரித் தந்திரங்களை கையாள வேண்டியது தவிர்க்க முடியாதது.

அதேவேளை, நாடு மோசமான நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இந்தநிலையில் அவ்வாறான தந்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பொருளாதார மீட்சியில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அதனைச் செய்யும் ஆற்றலும், பலமும் அவருக்கு இருக்கிறதா என்பது விரைவிலேயே வெளிப்பட்டு விடும்,

கார்வண்ணன்