கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்கத் தயார் – சஜித்

250 0

நாட்டுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்வரை எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. அவர் பதவி விலகியவுடன் நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு, சுபீட்சத்தை அடைந்துகொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தயாராக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் என்பதே நாட்டின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. அக்கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றுவேண்டும். அதுவரையில் நாம் எந்தவொரு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கும் தயாரில்லை. ஜனாதிபதியின் இராஜினாமாவைத் தொடர்ந்து நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு, சரியான செயற்திட்டத்தின் கீழ் மக்கள் எதிர்பார்க்கும் சுபீட்சத்தை உருவாக்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷவின் அடக்குமுறைகள் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 நாட்களுக்கும் அதிகமான காலம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தவர்கள்மீது வன்முறைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து பொலிஸ்மா அதிபர் வெளிப்படைத்தன்மையுடன் எவ்வித பக்கச்சார்புமின்றி விசாhரணைகளை முன்னெடுக்கவேண்டும். அதன்மூலம் இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை தற்போதைய நிலைவரத்தை மேலும் கலவரமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்கவேண்டாம் என்று பொலிஸ்மா அதிபரிடமும் முப்படைகளின் தளபதிகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன். வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.