இலங்கைக்கான சீனத்தூதுவருடன் சந்திப்பொன்றை நடாத்தியிருந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது நிர்வாகத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகக் காணப்படும் என்று சீனத்தூதுவரிடம் உறுதியளித்தார்.
இலங்கைக்கான சீனத்தூதுவர் கி சென்ஹொங் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை(11) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் பங்கேற்றிருந்தார்.
இச்சந்திப்பில் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிநிலை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த சிக்கல்களுக்கு மத்தியில் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் சீனத்தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
அதுமாத்திரமன்றி தனது நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் வெளிப்படைத்தன்மையுடனான ஆட்சி, இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், அடக்குமுறைகளை முடிவிற்குக்கொண்டுவரல் ஆகியனவே மிகவும் முக்கியமானவையாகக் காணப்படும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மேலும் தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பத்றகு சீனாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று அந்நாட்டுத்தூதுவரிடம் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, எனவே இவ்விடயத்தில் தலையீடு செய்யுமாறும் வேண்டுகோள்விடுத்தார்.
அத்தோடு தனது நிர்வாகத்தில் சீனாவுடனான தொடர்புகள் மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் பொறுப்புவாய்ந்ததாகவும் காணப்படும் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் உறுதியளித்தார்

