முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதையடுத்து, ஒரு நாள் வன்முறையைத் தூண்டியதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த எனது தந்தை இந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ இன்று தனியார் செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆத்திரமடைந்த மக்கள் முற்றுகையிட்டதையடுத்து, இன்று அதிகாலை இராணுவத்தினரால் அவர் வெளியேற்றப்பட்டார்.
நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்,” என்று நாமல் கூறினார், அவரது குடும்பத்திற்கு எதிரான போக்கால் மோசமான இழுக்கை சந்தித்துள்ளோம் என நாமல் விவரித்தார்.
மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தலைநகர் கொழும்பில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேலியை உடைத்து தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
“எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார்” என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

