அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் போராடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை

419 0

எங்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நேற்று(01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இளைஞர்களே, யுவதிகளே நீங்கள் உங்களுடைய பொருளாதாரம் பற்றி தான் போராடுகிறீர்கள் நாங்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது.

நாங்கள் இன்று இந்த கூட்டத்தை நடத்துகின்ற இடம் நாங்கள் பேசுகின்ற இந்த இடம் ஒரு தமிழர்களின் அடையாளத்தை நிலை நிறுத்திய இடம்.

எங்களுக்கு முன்னால் சந்திரன் பூங்காவில் எங்களது இதயத்தைத் துளைக்கும் ஒரு துப்பாக்கி ரவை காணப்படுகின்றது. இதுபோன்று நமது மண்ணில் இராணுவச் சின்னங்கள் அடக்குமுறைகள் எங்கள் மண்ணிலேயே இப்போதும் காணப்படுகின்றன. இராணுவ அடையாளங்களிற்கு மத்தியில் தான் நாங்கள் வாழ்கின்றோம்.

தென் பகுதியில் இருக்கின்ற சிங்கள இளைஞர்கள், யுவதிகள் போராடுகிறீர்கள் உங்களுடைய போராட்டத்தில் நாங்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்று சிந்திக்கின்றோம்.

எங்களது இளைஞர்கள், யுவதிகள் சிந்திக்கின்றார்கள் ஒரு சிங்கக் கொடிக்கு கீழ் நாங்கள் நிற்கக்கூடிய தகுதியைத் தராதரத்தை இந்த நாடு இவ்வளவு காலமும் எங்களுக்கு தந்து இருக்கின்றதா? என்பதை நாங்கள் திரும்பி பார்க்க வேண்டும்.

ஒரு சிங்கக் கொடியை இறக்குவதற்காக அந்த கம்பத்தில் ஏறிய நடராஜன் இலங்கை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மலையகத்தில் ஒரு லக்ஷ்மன் கொல்லப்பட்டார். இந்த கொடியை எதிர்த்து நாங்கள் எவ்வளவு தியாகங்களைச் செய்திருக்கின்றோம்.

அதே சிங்ககொடியோடு தான் இது ஒரு பௌத்த சிங்கள நாடு என்று பேரினவாத கொள்கையோடு போராடிக் கொண்டிருக்கின்ற சிங்கள தம்பிமார்களை சிங்களத் தலைவர்களே உங்களோடு நாங்கள் வந்து கை கோர்ப்பதென்றால் வடக்கு கிழக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.

உங்களில் யாரோடு நாங்கள் பேசுவது இதில் நீங்கள் யார் எங்களுடன் பேசக்கூடிய பேச்சாளராக இருக்கிறீர்கள் வடக்கும், கிழக்கும் தமிழர்களுடைய பூர்வீக தாயகம் என்பதை உங்களால் அறிவிக்க முடியுமா? அல்லது இந்த மண்ணில் இரண்டு தேசிய இனங்கள் உள்ளது அதாவது ஒன்று தமிழ் தேசிய இனம் மற்றது சிங்கள தேசிய இனம்.

தமிழ் தேசிய இனம் தனக்கே உரித்தான மொழியுரிமைகளோடும் நில அடையாளங்களோடும் இந்த மண்ணிலேயே வாழுகின்ற தகுதியை கொண்டவர்கள் அவர்கள் இந்த மண்ணினுடைய மூத்த குடிகள் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

அல்லது போராடுகின்ற உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் பொருளாதாரத் தடைகளையும் சவால்களையும் எதிர் கொண்டு வாழ்ந்தவர்கள் இன்று எரிபொருள் விலையேற்றம் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள் இவற்றினுடைய பிரச்சினைக்கு தான் உங்களது போராட்டம் போராட்டத்திற்கான தீர்வு கிடைத்துவிடும்.

ஆனால் எங்களுக்கு எங்களுடைய வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் தமிழர் சுயாட்சி உரிமை இறைமை என்ற அங்கீகாரத்தை வழங்குவதற்கு சிங்கள தேசம் தயாராக இருக்கின்றதா? அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுகின்றீர்களா? அல்லது காணாமல் போனவர்கள் பற்றிய அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க தயாரா?

எந்த ஒரு அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத ஒரு சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் நாங்கள் தயாராக இல்லை நாங்கள் இந்தப் பொருளாதாரத் தடைகளுக்கு எல்லாம் முகம் கொடுத்து வாழ்ந்தவர்கள் இந்த நாட்டில் யாரும் இறக்கவில்லை யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை யாரும் அரசியல் கைதிகளாக இருக்கவில்லை.

ஆனால் இன்று நீங்கள் உங்களுடைய பொருளாதாரம் பற்றி தான் போராடுகிறீர்கள் நாங்கள் உங்கள் பொருளாதாரத்தை கட்டி தருகின்றோம் இரண்டு வருடங்கள் வடக்கு, கிழக்கு ஆட்சியை தாருங்கள் நாங்கள் பொருளாதாரத்தில் உங்களுக்கும் உதவி செய்கின்றோம், அதற்கு தயாராக இருக்கின்றோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.