வழக்கு விசாரணைக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் முன்னாள் அமைச்சர்

327 0

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நேற்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சோசலிச இளைஞர் சங்கம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாகவும் அதற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுக்கொள்ளுமாறும் சோசலிச இளைஞர் சங்கம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக, அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கு கெரம் விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

2014 ஆம் ஆண்டு சுமார் நான்கரை கோடி ரூபாய் செலவிட்டு 14 ஆயிரம் கெரம் மற்றும் சதுரங்க பலகைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டு பலகைகளை விளையாட்டுத் துறை அமைச்சு பொறுப்பேற்றுள்ளது என ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டிருந்தாலும் அதிகாரிகள் எவரிடமும் அவை கையளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில், மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் முன்னர், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என சோசலிச இளைஞர் சங்கம் கூறியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் புயல் காரணமாக அச்சமடைந்துள்ள, நாட்டின் பொது பணத்தை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர்.

இதனால், மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது, அவர் வெளிநாடு செல்ல தடையுத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்த முறைப்படு செய்யப்பட்டதாக சோசலிச இளைஞர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதில் எமக்கு பிரச்சினையில்லை, அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை நாட்டுக்கு திருப்பி கொடுத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.