கடற்கரையில் 5 அடி உயர சாமி சிலை கரை ஒதுங்கியது- அதிகாரிகள் மீட்டனர்

182 0

சொத்தவிளை அருகே கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலையை இன்று கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் சொத்தவிளை கடற்கரையும் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை தொடங்கியதையடுத்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

நேற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சொத்தவிளை அருகே பள்ளம் துறை ஆராட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை சாமி சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த பொதுமக்கள், சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கும், மதுசூதனபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுசூதனபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி பிரான்சிஸ்புரோஸ்கான், ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் கனிசெல்வி மற்றும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கடற்கரையில் 5 அடி உயரமுள்ள சாமி சிலை கிடந்தது.

இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சாமி சிலையை மீட்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட சாமி சிலையை இன்று கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.