ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷியாவிற்கு பதில் இடம் பெற போகும் நாடு எது?- ஐ.நா பொதுச் சபையில் மே 11-ந் தேதி வாக்கெடுப்பு

188 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய ஐ.நா.பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டு அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்ததற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐ.நா.பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் 93 நாடுகள் ஆதரவாகவும், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தன.
இந்தியா உள்பட 58 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்த ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.பொதுச் சபை செய்தித் தொடர்பாளர்  பாலினா குபியாக்,  ரஷியா இடைநீக்கம் செய்யப்பட்டதால்  47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் காலியாக உள்ள இடத்திற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒரு நாட்டிற்கு இடம் அளிக்க மே 11ந் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக கூறினார்.
தற்போதுவரை செக் குடியரசு மட்டுமே வேட்பாளர் களத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.