நாட்டிலுள்ள சகல உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், களஞ்சியசாலை உரிமையாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் வழங்குனர்கள் தமது கையிருப்பிலுள்ள தயாரிப்புக்களின் விபரங்களை தௌிவாக வைத்திருக்குமாறு அறிவித்து நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்குறிப்பிடப்பட்ட தரப்பினர் பொருள் வழங்குனரின் பெயர் , கொள்வனவு திகதி, கொள்வனவு செய்யப்பட்ட விலை, அளவு, தொகுதி எண் உள்ளிட்டவற்றைக் கொண்ட பற்றுச்சீட்டு அல்லது விலைப்பட்டியல் அல்லது இலத்திரனியல் மூலமான உறுதிப்படுத்தல்களை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த ஆவணங்கள் இன்றி பொருட்களை கொள்கலன்கள் , வர்த்தக நிலையம் அல்லது வேறு ஏதேனும் இடங்களில் விற்பனை செய்யவோ , களஞ்சியப்படுத்தவோ, விநியோகிக்கவோ, காட்சிப்படுத்தவோ முடியாது என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள இவ் வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

