அரசாங்கத்திற்கு எதிரான பெரும்பான்மையை நிரூபிப்போம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

309 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , அரசாங்கத்திற்கு எதிரான பெரும்பான்மை பலத்தை தம்மால் நிரூபிக்க முடியும். எனினும் அந்த எண்ணிக்கை இரகசியமாகும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் திங்கட்கிழமை (25) மாலை கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

மத்திய குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

கேள்வி : புதிய பிரதமராக யாரை பரிந்துரைத்துள்ளீர்கள்?

பதில் : இடைக்கால அரசாங்கத்திற்கு புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். புதிய பிரதமர் யார் என்பதை பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளும் கலந்தாலோசித்து தெரிவு செய்ய வேண்டும்.

கேள்வி : உங்களது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

பதில் : இல்லை. அதனை நான் எதிர்பார்க்கவில்லை.

கேள்வி : அரசாங்கத்திற்கு எதிராக பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா?

பதில்   தற்போது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லையல்லவா?

கேள்வி : ஆனால் அரசாங்கம் பெரும்பான்மை இருப்பதாகக் கூறுகின்றதே?

பதில் : நாம் அறிந்த வகையில் அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை.

கேள்வி : அவ்வாறெனில் தற்போது உங்கள் வசம் 113 அல்லது 120 ஆதரவு காணப்படுகிறதா?

பதில் : பெரும்பான்மை எம் வசம் உள்ளது. எண்ணிக்கையைக் கூற முடியாது. அது இரகசியமாகும் என்று குறிப்பிட்டார்.

சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்குவதற்கு மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

வெளியிலிருந்து கொண்டு ஒத்துழைப்பை வழங்குவது இங்கு முக்கியமல்ல. மேலும் இராஜாங்க அமைச்சுக்களை ஏற்றுக் கொண்டுள்ள ஷாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு மத்திய குழு தீர்மானித்துள்ளது என்றார்.