கோட்டாபய ஆட்சி வேண்டாம் என்று நாங்கள் அன்றே சொல்லி விட்டோம்

186 0

தமிழர்களைப் பொறுத்தவரை நாங்கள் அன்றே சொல்லி விட்டோம் கோட்டாபய ஆட்சி வேண்டாம் என்று என வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்சன் தெரிவித்துள்ளார்.

வலி. தெற்கு பிரதேச சபையில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டா கோ ஹோம்” என்று தங்களுடைய ஆதங்கங்களை இப்படிப்பட்ட இந்த நாட்டினுடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வேண்டும் என்று காலிமுகத்திடலில் மட்டுமல்லாது நாடளாவிய ரீதியில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடி உருவாகும் என்பதனை அறிந்து நாடாளுமன்றத்திலேயே பலர் இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு முதல் சொல்லி வந்தாலும் இந்த அரசாங்கம் அசட்டையீனம் செய்து இந்த நாட்டு மக்களை வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது எனவே அவர்களினுடைய பிரதான நோக்காக காணப்படுவது இந்த நாட்டு ஜனாதிபதி பதவி விலகி திறமையானவர்களின் கையில் நாடு ஒப்படைக்கப்பட வேண்டும்.

மேலும் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியுடன் இந்த நாடு மீண்டெழ வேண்டும் என்பதாகும்.

ஆனால் பிரதமர் சரி, ஜனாதிபதி சரி, இந்த நாட்டின் தங்களுடைய பதவிகளில் இருந்து விலக மாட்டோம் எனவும் தாங்கள் 69 லட்சம் மக்களினுடைய ஆணையைப் பெற்று வருகை தந்தவர்கள் எனவும் கூறி வருகின்றார்கள். ஆனால் இந்த 69 லட்சம் மக்களும் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே மக்களினுடைய ஆணைக்கு அடிபணிந்து இவர்கள் இந்த ஆட்சியில் இருந்து விலகி வெகு விரைவில் இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.

தமிழர்களுடைய நிலைப்பாடினை நோக்குகின்ற பொழுதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுதும் வடக்கு- கிழக்கு மக்களாக இணைந்து கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கணிசமான வாக்குகளை தமிழர்கள் அளித்தார்கள்.இன்றும் அதைத்தான் தென்னிலங்கை மக்களும் புரிந்து இருக்கின்றார்கள்.

ஆகவே இந்த நாட்டினுடைய அரசாங்கமானது பதவி விலகி பொருளாதார துறையில் சிறந்து விளங்கும் நபர்களிடம் நாடு கையளிக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களின் மனதில் மாற்றம் ஏற்படுகின்றமை உண்மையான விடயமாக காணப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் தமிழர்களுடைய பிரச்சினையில் எவ்வளவு மன மாற்றத்தினை கொண்டு இருக்கிறார்கள் என்பதில்தான் கேள்வி காணப்படுகின்றது.

குறிப்பாக சிங்கள மக்கள் பொருளாதார நெருக்கடியில் தங்களுடைய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தான் இவ்வாறு போராடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

2009ஆம் ஆண்டு எங்களுடைய மக்கள் லட்சக்கணக்காக கொல்லப்பட்ட வேளையில் தான் அவர்கள் கிரிபத் கொடுத்து தெற்கிலே யுத்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிச்சயம் தமிழர்களுடைய பிரச்சினையை புரிந்து கொள்ளுவார்கள். இருப்பினும் தமிழர்களுடைய அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணுகின்ற பொழுதுதான் இந்த பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வு என்பது எட்டப்படும்.

குறிப்பாக வட கிழக்கில் ஏராளமான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்றார்கள். நிச்சயமாக அவர்களுடைய நிதி உதவியோடு இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை வழங்கமுடியும். அவர்களுடைய கோரிக்கையாக இருப்பது தமிழர்களுடைய நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்பதாகும்.

பல மில்லியன் டொலர்களை அவர்கள் தருவதற்கு தயாராக இருக்கின்றார்கள். தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அவர்களுடைய உதவி கிடைப்பது என்பது கேள்விக்குறியானது.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ் தரப்பு சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நில அபகரிப்பு தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடைய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து உடனடியாக ஜனாதிபதி இராணுவத் தளபதியை சந்தித்து அவர்கள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்றைய நாளிலும் பொன்னாலை பிரதேசத்தில் ஒரு காணி அபகரிப்பு இடம்பெறவிருந்த நிலையில் அது தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தது நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஆகவே எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே இவ்வாறு நில அபகரிப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் ஆகும்.

ஆகவே ஒரு மனத்தூய்மையுடன் உங்களுடைய தீர்வுகள் எட்டப்படும் என்ற பொழுது நிச்சயமாக இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாத எங்களுடைய புலம்பெயர் தேசத்தவர்கள் நாட்டின் தீர்விற்கு உதவுவதற்கு முன் வருவார்கள் என” அவர் தெரிவித்துள்ளார்.