சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: அபராதம் கட்டாதவர்களிடம் போன் போட்டு பண வசூலில் ஈடுபடும் போலீசார் போதையில் வாகனம் ஓட்டிய 197 பேர் மொத்தமாக ரூ.20 லட்சத்தை செலுத்தினர்
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் அபராத வசூல் முறை 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனைமுறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் அபராதம் செலுத்துவது நன்றாக இருந்தபோதிலும், சாலைவிதி முறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இதனை சரிசெய்ய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர். இதன்படி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கடந்த 11-ந் தேதி 10 அழைப்பு மையங்களை திறந்து வைத்தார்.
இதில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கடந்த 11- ந் தேதி முதல் 21-ந் தேதி வரையில் முதல் 11 நாட்களில் 10 அழைப்பு மையங்களில் மொத்தம் 2389 தொலைபேசி அழைப்புகள் செய்து சாலை விதிகளை மீறுபவர்களிடம் போலீசார் பண வசூலில் ஈடுபட்டனர். இப்போது நிலுவையில் உள்ள விதிமீறல்கள் குறித்து தெரிவித்ததுடன், அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. இல்லையெனில் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம் கடந்த 11 நாட்களில் 55,885 வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 542 அபராத தொகை வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் பெறப்பட்டுள்ளது.
100 முறைக்கு மேல் விதி மீறலில் ஈடுபட்ட 9 வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்த்து 37 ஆயிரமும், 50 முறைக்கு மேல் விதி மீறலில் ஈடுபட்ட 43 வாகன உரிமையாளர்களிட மிருந்து ரூ.3 லட்சத்து 43 ஆயிரத்து 470-ம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
20 முறைக்கு மேல் விதிமீறலில் ஈடுபட்ட 158 வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 57 ஆயிரத்து 760 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 10 தடவைக்கு மேல் விதிமீறலில் ஈடுபட்ட 263 வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 720-ம், 2 முறைக்கு மேல் விதி மீறலில் ஈடுபட்ட 2,881 வாகன உரிமையாளர்களிடம் ரூ.15 லட்சத்து 33 ஆயிரத்து 640-ம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க சிறப்பு தணிக்கை தொடங்கப்பட்டு 197 வழக்குகளில் மொத்த அபராதமாக ரூ.19 லட்சத்து 81 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகன நிறுவன உரிமையாளர்கள் தங்கள் அனைத்து வாகனங்களுக்கும் நிலுவையில் உள்ள அபராதம் செலுத்த முன்வந்துள்ளனர். இதில் குறிப்பிடும் படியாக ஒரே நிறுவனம் 17 வாகனங்களின் நிலுவையில் உள்ள விதிமீறல் களுக்காக மொத்தமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமாக செலுத்தியுள்ளது.
எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா? என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

