கோடை வெயில் தாக்கத்தில் தப்பிக்க மண்குளியல்- அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக குளிக்கலாம்

280 0

கண்ணுக்கு மண்ணை காட்டன் துணியில் கட்டி கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் வைத்துக்கொண்டால் போதும் உடல் பருமனை குறைக்கவும் மண்குளியல் உதவும்.

கொஞ்ச நேரம் கூட வெளியில் நடமாட முடியவில்லை. வெயிலா இது…. தீ கங்குகளை அள்ளி வீசியதுபோல் அல்லவா உடலெல்லாம் எரிகிறது…
நிழலின் அருமை வெயிலில் போனால் தெரியும் என்றது சும்மாவா…? உடல் முழுக்க வியர்க்குரு… முகம் கருத்து போகிறது…. கண் எரிகிறது… உடல் சூடு தாங்க முடியவில்லை… இப்படி ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள்.
தினமும் இரண்டு தடவை குளித்து பார்க்கிறேன்.. சரும பாதுகாப்புக்கென்று விளம்பரங்களில் பார்க்கும் எல்லா கிரீம்களையும், லோ‌ஷன்களையும் வாங்கி போட்டுத்தான் பார்க்கிறேன். எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்று பலர் குறிப்பாக இளம்பெண்கள் புலம்புவதை இந்த கோடையில் கொஞ்சம் அதிகமாகவே கேட்டு இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்களை பார்த்து, கவலைப்படாதீங்க. மண்ணிலேயே குளிக்கலாம். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து போகும் என்கிறார்கள் அரசு இயற்கை மருத்துவகல்லூரி மருத்துவர்கள்.
மண்குளியல் என்றதும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். இன்றும் சில கிராமங்களில் திருவிழாக்களில் உடலெல்லாம் மண்ணை பூசிக்கொண்டு வருவதை பார்க்கும்போது ஆச்சரியமாகவும், நகைச்சுவையாகவும் தான் தெரியும்.
ஆனால் மண்ணுக்கும் மனிதனுக்கும் பாரம்பரிய தொடர்பு இருப்பதையே காட்டுகிறது. கோடைக்கு இதமளிக்கும் மண்குளியல் பற்றி அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை கைநுட்பத்துறை தலைவர் டாக்டர் தீபா கூறியதாவது:-
பஞ்ச பூதங்களில் பூமியும் ஒன்று. அந்தகாலம் முதல் மண்ணோடு மனிதனுக்கும் தொடர்பு உண்டு. நலீன மருத்துவம் வளராத காலங்களில் உடலில் ஏற்படும் சிறு காயங்களுக்கு மண்ணையே மருந்தாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
கோடை காலத்தில் சரும பிரச்சினை தவிர்க்க முடியாதது. அதிகமான வெப்பம் உடலை தாக்கும் போது உடல் சூடு அதிகரிக்கும். அந்த வெப்பம் கண், வியர்வை, ஆசனவாய் வழியாக வெளியேறும். கடுமையான எரிச்சல் மூலம் இதை உணர முடியும். இந்த மாதிரி அசவுகரியங்களால் மன அழுத்தம் ஏற்படும். இவற்றை போக்க மண்குளியல் சிறந்தது.
நமது பகுதியில் சாதாரணமாக கிடைப்பது களிமன், செம்மண், புத்துமண், கடல்மண் வகைகள்தான்.
களிமண்ணை எடுத்து அதில் கலந்து இருக்கும் கல், சிறுகுச்சிகள் போன்ற பொருட்களை நீக்க வேண்டும். பின்னர் மண்ணை தண்ணீரில் குழைத்து இரவு நிலா வெளிச்சத்தில் உலர வைக்க வேண்டும்.
மறுநாள் அதை எடுத்து தண்ணீரில் குளைத்து காலை இளம் வெயில் நேரத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை பூச வேண்டும். சுமார் அரை மணி நேரம் உலர விட்டு விட்டு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அப்போது சோப்பு, ஷாம்பு போன்ற செயற்கை பொருட்களை பயன்படுத்த கூடாது.
இந்த மண்குளியலால் உடல் சூடு, சரும பிரச்சினைகள் நீங்கும். முகத்துக்கு மட்டும் போடுவதாக இருந்தால் ரோஸ் வாட்டர், சந்தனம், ரோஸ், இதழ்களையும் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், வடுக்கள் நீங்கி புது பொலிவு பெறும் செயற்கை கிரீம்களைவிட சிறந்தது.
கண்ணுக்கு மண்ணை காட்டன் துணியில் கட்டி கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் வைத்துக்கொண்டால் போதும் உடல் பருமனை குறைக்கவும் மண்குளியல் உதவும்.
இதை சுயமாக செய்வதற்கு முன்பு ஒரு முறையாவது இயற்கை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் உடலில் இருக்கும் பிரச்சினைகளை அறிந்து அதற்கு ஏற்றவகையில் சில மூலிகைகளையும் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். அதன்மூலம் விரைவாகவும், கூடுதலாகவும் நிவாரணம் கிடைக்கலாம் என்றார்கள்.
குழந்தை பருவத்தில் மண்ணில் புரண்டது மட்டுமல்ல பெரியவர்கள் அனபிறகும் மண்ணில் குளித்து ஆனந்தமாக வாழலாம்.
தமிழகம் முழுவதும் இயற்கை மருத்துவர்கள் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு இயற்கை மருத்துவமனைகளில் இலவசமாகவே மண்குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலை 7.30 மணி முதல் 10 மணிக்குள்ளும், மாலை 3 மணி முதல் 5 மணிக்குள்ளும் செல்லலாம்.