விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் 2022 அழகிப்போட்டி- திருநங்கைகளால் குலுங்கிய நகரம்

161 0

அழகிபோட்டியையொட்டி விழுப்புரத்தில் ஏராளமான திருநங்கைகள் திரண்டுள்ளனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக்கூடியது கூத்தாண்டவர் கோயில். தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மடப்புரம் அருகே கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டு மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர். நேற்று கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இன்று மாலை 5 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மிஸ் கூவாகம் 2022 அழகிபோட்டி நடைபெற உள்ளது. இதில் கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்பு, தனித்திறன்போட்டிகள், கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கிய திருநங்கைகளுக்கு சான்று அளித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் அமைச்சர் பொன்முடி, நடிகர் சூரி, நடிகை நளினி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

அழகிபோட்டியையொட்டி விழுப்புரத்தில் ஏராளமான திருநங்கைகள் திரண்டுள்ளனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தொடர்ந்து வரும் 19-ந் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அப்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு அரவாணை கணவனாக ஏற்று அன்று இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்வார்கள்.

மறுநாள் 20-ந் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கி பந்தலடி சென்று அங்கு அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்து வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து விதவை கோலம் பூண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.

21-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா பெருவிழா விமரிசையாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.