மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ் புதைகுழியை அகழ்வு செய்யும் சட்டவைத்திய நிபுணர் மற்றும் பேராசிரியர் ஆகியோர் மன்றில் சமூகம் அளிக்காமையால் அவர்களுக்கு மீண்டும் அழைப்பானை விடுக்கப்பட்ட நிலையில் இவ் வழக்கு பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் நகரில் சதொச கட்டிடத்துக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் கட்டிட வேலை இடைநிறுத்தப்பட்டு மனித எச்சங்களுக்கான அகழ்வு வேலைகள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்லையில் இடம்பெற்று வந்த நிலையில் மீண்டும் குறித்த வழக்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சதொச புதைகுழி வழக்கு இன்று (06.04.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி அப்துல் சமட் கிபத்துல்லா முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ் வழக்கானது கடந்த முறை 25.03.2022 அன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ்சோமதேவ மற்றும் சட்டவைத்திய அதிகாரி ராஜபக்ச ஆகியோர் அன்று மன்றில் பிரசன்னமாகி இருக்கவில்லை.
அவர்கள் தங்களுக்கு ஏற்ற தினத்தை அறிவிக்கும்படி தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றையத் தினத்தை அதாவது 06.04.2022 ஆம் திகதியை குறிப்பிட்டிருப்பதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய இன்றையத் தினம் (06.04.2022) குறித்த சதொச மனித புதைகுழி வழக்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டது.
ஆனால் இன்றும் (06) இவர்கள் மன்றில் ஆஜராகாத நிலையில் மீண்டும் இவர்களுக்கு ஒரு அழைப்பாணை அனுப்புவது என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது
இதைத் தொடர்ந்து இவ் வழக்கு விசாரனை இம்மாதம் 27 ஆம் திகதி மேல் நீதிமன்றில் இவ் வழக்குக்கான அறிக்கை சமர்பிக்க வேண்டி இருப்பதுடன் இந்த வழக்கு எதிர்வரும் 26.04.2022 அன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட இருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரனி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
இவ் வழக்கின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன் மற்றும் றனித்தா ஞானராஜ் ஆகியோரும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரனி புராதினியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர் நான்கு தாய்மாரும் மன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரனிகள் ஆஜராக முடியாது என மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அரச சட்டத்தரனிகள் காணாமல் போனோர் சார்பிலுள்ள சட்டத்தரனிகள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான வாத பிரதிவாதங்கள் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து, ஆராய்ந்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் 22.02.2022 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரனிகள் ஆஜராக முடியும் என இவ் வழக்கில் கடட்டளையாக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே இவ் வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

