நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார சேவைகள் அமைப்புக்களின் 13 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (05) நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது,
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அவசரகால சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், மருத்துவ பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், சுகாதார சேவைகளுக்கு அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டம் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் அதேவேளையில் இவ் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.டபிள்யூ.விமலரட்ண அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக வட மாகாணம் பூராகவும், மன்னாரிலும் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றோம் எனவும் ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்போடு தற்பொழுது அரசுக்கு எதிராக மக்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு போராட்டமாகவும் அமைந்துள்ளது என வட மாகாண மற்றும் மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம் இவ்வாறு தெரிவித்தார்.

