நத்தம் அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த வில்வீரன் நடுகல் கண்டெடுப்பு

198 0

வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை கடக முத்திரையில் பிடித்தும் இடது கையில் வில்லை, அதன் நடுப்பகுதியான நாபியை பிடித்தும் காட்சியளிக்கிறான்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சி.பி.ஏ. கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் மாணிக்கராஜ் அக்கல்லூரியின் முதல்வர் சிவகுமாரின் ஆலோசனையின்படி திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கருப்பையாவுடன் இணைந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல், கல்வெட்டு, நடுகற்கள் பற்றிய தொன்மையான வரலாறு குறித்து நேரடி களப்பயிற்சி அளித்தனர்.

மேலும் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறி மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே கம்பளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிரசன்னா ஜூலியட் அனுமதியுடன் அப்பள்ளியின் ஆசிரியர் சுப்பு உலகநாத பாண்டியன், அருள்செழியன் தலைமையில் மாணவர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்குறிச்சி அருகே உள்ள குப்பாயூர் கிராம பகுதியில் நேரடி கள ஆய்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது கிருஷ்ணசாமி என்பவரின் தோட்டத்தில் மூக்கரை பிள்ளையார் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வில்வீரன் நடுகல்லை கண்டறிந்தனர். 3 1/2 அடி உயரம், 1 1/2 அடி அகலத்தில் எடுக்கப்பட்ட நடுகல் கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

பிற்காலப் பாண்டியர்கள் தாங்கள் ஆட்சிசெய்த பகுதிகளை நிர்வாகத்திற்காக பல நாட்டு பிரிவுகளாக பிரித்திருந்தனர். அதன்படி செங்குறிச்சியும் அதனை சுற்றியுள்ள ஊர்களும் அதம்ப நாட்டுப் பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது.

குப்பாயூர் என்ற கிராமம் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியாகும். இங்கு வாழ்ந்த ஒரு வில் வீரனின் வீர மரணத்தின் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம்.

இதில் வீரன் சமபங்க நிலையில் நின்று தனக்கு எதிரே நேராக பார்த்தவாறு புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முகம் தேய்ந்து உள்ள நிலையில் வீரனுக்கு வலப்பக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்ட கொண்டையும், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் அணிகலன்கள் அணிவித்து அழகாக வெட்டப்பட்டிருக்கிறது.

வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை கடக முத்திரையில் பிடித்தும் இடது கையில் வில்லை, அதன் நடுப்பகுதியான நாபியை பிடித்தும் காட்சியளிக்கிறான். விரிந்த மார்பு இடை சிறியதாக வீரனுக்கு உரிய உடலமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடை முதல் முழங்கால் வரையிலான அரை ஆடையும் இடையில் ஆண் வீரர்கள் அணியும் அரைபட்டிகை என்னும் அணிகலன் மணிகளுடன் காணப்படுகிறது. வலது பக்கமாக இடையில் செருகிய வாள் ஒன்று முழங்காலுக்குக் கீழ் வரை தொங்குவது போன்று உள்ளது.

வீரனுடைய வீரக்கால் பாதங்களும் வீரனுக்கு இடப் பக்கமாக திரும்பிய நிலையில் உள்ளது. வீரத்திற்கு அடையாளமாக வீரர்கள் அணியும் வீரக்கழல் என்ற அணிகலனும் பரியகம் என்னும் அணிகலனும் காலில் உள்ளன. இந்த வில் சிற்ப அமைதியை வைத்து வீரன் போர் வீரனாக இல்லாமல் ஒரு வேட்டை வீரனாக இருந்திருக்க வேண்டுமென மாணவர்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்டது.

இது போன்று மாணவர்களை நேரடியாக கள ஆய்வு பணியில் ஈடுபடுத்தி தொன்மையான வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், நடுகற்களையும் அதன் வரலாற்றை எடுத்துக் கூறினால் அவர்களுக்கு இத்தகைய நினைவுச் சின்னங்களை பற்றிய அறிவும் அவற்றைப் பாதுகாக்கும் உணர்வும் ஏற்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.