கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து ஆண்கள் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் 3 விசைப்படகு, ஒரு நாட்டுப்படகில் புறப்பட்டு சென்றனர்.
இந்திய, இலங்கை இடையே உள்ள மன்னார் வளைகுடா கடல்பரப்பில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த தீவை சுற்றி மீன்வளம் நிறைந்து காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க இப்பகுதிக்கு செல்வதுண்டு.
இலங்கைக்கு சொந்தமான இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் திருப்பலி திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழாவில் இந்திய, இலங்கை மக்கள் தொன்றுதொட்டு பங்கேற்று வருகிறார்கள்.
இதற்காக ராமேசுவரத்தில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதுண்டு. 2 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் இருநாட்டு மக்களும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்வார்கள்.
இலங்கையில் போர் நடந்தபோது இந்த திருவிழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருந்தது. போர் முடிந்தபின் வழக்கமான உற்சாகத்துடன் அந்தோணியார் திருவிழா நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புனித அந்தோணியார் கோவில் திருவிழா குறைந்த அளவு பக்தர்களுடன் நடைபெற்றது. ராமேசுவரத்தில் இருந்தும் கச்சத்தீவு திருவிழாவுக்கு சொற்ப அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டும் கொரோனா காரணமாக ராமேசுவரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என இலங்கை அரசு அறிவித்திருந்தது. ராமேசுவரம் மீனவர்கள் வலியுறுத்திய தன்பேரில் மாநில, மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு 80 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
அதன்படி கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து ஆண்கள் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் 3 விசைப்படகு, ஒரு நாட்டுப்படகில் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக படகுகளில் ஏறுவதற்கு இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் உள்பட 4 அடுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளின் உடைமைகள், கொரோனா பரிசோதனை சான்று, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர்.
பின்னர் பாதுகாப்பு கவச உடை அணிந்தபின் படகுகளில் ஏற்றப்பட்டனர். இன்று பிற்பகல் கச்சத்தீவுக்கு சென்றடைவார்கள். அதன்பின் அங்கு நடக்கும் திருப்பலி, தேர்பவனி, கூட்டுப் பிரார்த்தனை ஆகியவற்றில் பங்கேற்று விட்டு நாளை மாலை அல்லது இரவுக்கு நாடு திரும்புகிறார்கள்.

