உக்ரைனின் மரியுப்ல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது.
மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 17 பேர் காயமடைந்தனர். மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு ஆகியவை சேதமடைந்தன. ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குட்டரெஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது. தமக்கு தொடர்பில்லாத போருக்கு பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வருகின்றனர். இந்த அர்த்தமற்ற வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

