தூத்துக்குடியில் நாளை மாலை கருணாநிதி உருவசிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

135 0

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வருகிறார்.

அப்போது வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தல், திட்டங்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை விருதுநகரில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவசிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 300 பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. நிர்வாகிகள் முதல்- அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர். பின்னர் இரவில் தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் அவர் தங்குகிறார்.

மறுநாள் (7-ந்தேதி) காலை 9 மணிக்கு முத்தையாபுரம் ஸ்பிக் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 ‘மெகாவாட்’ சூரியஒளி மின்சக்தி உபகரணங்களை திறந்து வைக்கிறார்.

அதனைத்தொடர்ந்து மாணிக்கம் மஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில், சிப்காட்டில் 1,152 ஏக்கரில் ரூ.1,000 கோடி மதிப்பில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் சர்வதேச அளவிலான பர்னிச்சர் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார்.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடியில் அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான பிரைண்ட்நகர், அம்பேத்கார்நகர் பகுதிகளில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், பிற பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

அதனை முடித்துக்கொண்டு தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

பின்னர் தூத்துக்குடியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் கன்னியாகுமரி செல்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் செய்து வருகிறார்.

முதல்-அமைச்சர் தூத்துக்குடி வருகையையொட்டி அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது முதல்- அமைச்சர் வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், போக்குவரத்து பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.