பா.ஜனதா அலுவலகத்தில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசியது கண்காணிப்பு காமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
தி.நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நேற்று நள்ளிரவில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உடனடியாக பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரன் பிரசாத் தலைமையில், போலீசார் தீவிரமாக துப்புத்துலக்கினர்.
தி.நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பா.ஜனதா அலுவலகத்துக்கு வரும் சாலையில் உள்ள கேமராக்கள் மற்றும் கமலாலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர் யார் என்பது அடையாளம் தெரிந்தது. தேனாம்பேட்டையை சேர்ந்த ‘கருக்கா வினோத்’ என்ற ரவுடியே பா.ஜனதா அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் குண்டுகளை வீசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் முடுக்கிவிடப்பட்டனர். அதன்படி இன்று அதிகாலையில் கருக்கா வினோத் போலீஸ் பிடியில் சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார், பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியது ஏன் என்பது பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது கருக்கா வினோத், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் பா.ஜனதா கட்சியும், அதன் தலைவர்களும் நீட் தேர்வை ஆதரித்து பேசி வருகிறார்கள்.

நீட் தேர்வு வேண்டாம் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. எனவே நீட் தேர்வு விவகாரத்தில் பா.ஜனதாவின் நிலைப்பாடு எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துதான் பா.ஜனதா அலுவலகம் மீது நான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன்.
இவ்வாறு கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருப்பினும் கருக்கா வினோத் சொல்வது உண்மைதானா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டுகளை தயாரிப்பதற்கு கருக்கா வினோத்துக்கு வேறு யாரும் உறுதுணையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வேறு யாரும் அதன் பின்னணியில் உள்ளார்களா? என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

