அரச காணி ஒன்றில் கட்டடம் அமைக்க முற்பட்டமையினால் ஏற்பட்ட குழப்பம்

238 0

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட கல்முனை 01 C கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அரச காணி ஒன்றில் ஒரு குழுவினர் கட்டடம் அமைக்க முற்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த அரச காணியில் மக்களின் தேவை கருதி பொதுக்கட்டடம் ஒன்று அமைப்பதற்கு மக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் கட்டட ஒப்பந்தகாரர் அமைப்பினர் அங்கு அவர்களுக்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டமையினையடுத்து குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொது மக்களின் தேவைக்காக பயன்பட வேண்டிய அரச காணியை இவ்வாறு தனியார் அமைப்பினர் உரிமை கொண்டாட முற்படும் செயற்பாட்டினை அறிந்த பொது மக்களும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல தேரர் ஆகியோர் ஒன்றிணைந்து அவ்விடம் வருகை தந்து இதற்கான எதிர்ப்பினைக் காட்டியுள்ளனர்.

இவ் எதிர்ப்பு காரணமாக மேற்படி முயற்சி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும், கட்டடம் அமைக்க வந்த குழுவினரால் மாநகரசபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் ராஜனால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery