அரசாங்கம் திகதியை குறிப்பிட்டால் சந்திப்புக்கு நாம் தயார் – ஸ்ரீதரன்

243 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சகல  தமிழ் கட்சிகளும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளன. அரசாங்கம் திகதியை குறிப்பிட்டால் சந்திப்புக்கு நாம் தயார் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . ஸ்ரீதரன்   தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை எனக் கூறி  சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதை அரசாங்கம் கைவிட்டு  இதய சுத்தியுடன்  இதில் கவனம் செலுத்தினால் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நீதியமைச்சின் திருத்தச் சட்டங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த  ஸ்ரீதரன் எம்.பி  மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராக உள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் அதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச நாடுகளிடமும் அவர்கள் இவ்வாறே தெரிவித்து வருகின்றனர். உண்மையில் அரசாங்கம் அதற்கான திகதியை தந்தால் தான் நாம் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும்.

அதேபோன்று கடந்த ஒரு மாத காலத்தில் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும்  பல உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. எமது மீனவர்கள் வளங்களை இழப்பதும் உயிர்களை இழப்பதும்  வாழ்க்கைக்காக போராடுவதும் தொடர்கிறது.

நாடு என்ற வகையில் எமது நாட்டுக்கான கடல் எல்லை வகுக்கப்பட்டு உரிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட  வேண்டும். இந்திய மீனவர்கள் 200 மீற்றர் தொலைவுவரை வந்து செல்கின்றனர்.

கடற்றொழில் அமைச்சரிடம் முறைப்பாடு செய்தால் அவர் நீங்களும் அவர்களோடு மோதுங்கள். அவர்களைப் பிடியுங்கள் என்று வன்முறைக்கே வழி காட்டுகிறார். வடக்கில் சுப்பர் மடம் மீனவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நீதி கோரி போராட்டம் மேற்கொண்டார்கள். அரசாங்கம் அதற்கு நீதி வழங்கவில்லை.

இருநாட்டு மீனவர்களையும் மோதவிட்டு இந்தியாவுடன் எமக்குள்ள மீதமுள்ள தொடர்புகளையும் இல்லாமல் செய்ய மேற்கொள்ளப்படும்  சூழ்ச்சியா இது என்ற சந்தேகம் எழுகிறது. எவ்வாறெனினும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் மேலும் எத்தனையோ உயிர்களை இழக்க நேரிடலாம்.

இந்திய மீனவ சகோதரர்கள் இலங்கை மீனவர்களுடன் நியாயமான பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். கடல் மைல் எல்லை நிர்ணயிக்கப்பட்டு எமது மீனவர்களுக்கு உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்குவது அவசியம்.

நாட்டில் 60 வீதமான படையினர் வடக்கு, கிழக்கிலேயே குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ முகாம்கள்  கடற் படை முகாம்கள் பல வடக்கிலுள்ளன. அவ்வாறு இருந்தும் எமது மீனவர்கள் மரணமடைவதும் தாக்கப்படுவதும் தொடர்கின்றன . ஆனால் இதனை   அரசாங்கம் கவனத்தில் எடுப்பதில்லை  என்றார்.