முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மற்றும் ஒரு தந்தையை இழந்த யுவதி டுபாயில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு செல்லவுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யுவதி யோகராசா நிதர்சனா அவர்களே தனது விடா முயற்சியின் பயனாக டுபாயில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
போட்டியில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் தனது குடும்ப நிலைமை தொடர்பிலும் தனது இலக்கு தொடர்பிலும் கருத்து தெரிவித்த நிதர்சனா, இந்த போட்டியில் தங்கம் வென்று ஆசிய போட்டியில் பங்குபற்றுவேன் என தெரிவித்தார்.
01 ஆம் வட்டாரம் மருதமடு வீதி கைவேலி புதுக்குடியிருப்பில் வசிக்கும் யோகராசா நிதர்சனா தந்தை இல்லாத நிலையில் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் மாணவியாக இருந்த போது 2015 ஆம் ஆண்டு தொடக்கம் குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டு குத்துச்சண்டை பயிற்சிகளை பெற்று போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களை வென்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற குத்துச்சண்டை தேசிய போட்டியில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டு தங்க பதக்கத்தினை வென்றுள்ளதுடன் 48 தொடக்கம் 50 கிலோ எடைகொண்ட போட்டிகளில் கடந்த 5 ஆண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை வென்ற இவர் சர்வதேச தெரிவு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை பெரும்பான்மை இன பெண்ணிற்கே வெற்றி கிடைத்தது.
இதனை கருத்தில் கொண்டு எனது இடைவிடாத முயற்சியினை மேற்கொண்டு டுபாயில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருந்தேன் நான் செல்வதற்கான நிதி பற்றாக்குறை காணப்பட்டுள்ளது. ஒருதரும் உதவி செய்யாத நிலையில் எனது இறுதி முயற்சியாக படித்த பாடசாலையில் உதவி கேட்டேன். மத்திய கல்லூரியில் அதிபர் கதைத்து உதவுவதற்கான தொடர்பாளர்களை காட்டினார்.
தாய்த் தமிழ் பேரவை எனக்கு முழுமையாக உதவி செய்வதாக முன்வந்தார்கள். அவர்கள் தந்த நம்பிக்கையும் எனக்கு அவர்கள் செய்த உதவியும் இன்னும் இன்னும் குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் வந்துள்ளது எதிர்வரும் 26 ம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள போட்டியில் நான் பங்கேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயற்படவுள்ளேன். இதனை தொடர்ந்து நேபாளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் பயணிக்கின்றேன்.
எம்.ஏ.எஸ் குத்துச்சண்டை பயிற்சி கல்லூரியில் தான் பயிற்சி பெற்று வந்தேன். கொரோனா காரணமாக நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டைக்கான சரியான பயிற்சி வசதிகள் இல்லாத நிலையில் தற்போது நான் வவுனியாவிற்கு சென்று பயிற்சிகளையே மேற்கொண்டு வருகின்றேன். வீட்டில் கூட பொக்சிங்கிற்குரிய பொருட்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றேன்.
என்னைப்போன்ற பல யுவதிகள் திறமைகளுடன் இருந்தும் அவர்கள் கஸ்டத்தின் மத்தியில் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரமுடியாத நிலை காணப்படுகின்றது. நானும் கஸ்டப்பட்ட ஒரு யுவதிதான் தாய்த்தமிழ் பேரவையின் உதவியால் டுபாய்க்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
டுபாய் செல்வதற்கான ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபாவினை தாய்த்தமிழ் பேரவையினர் பொறுப்பெடுத்துள்ளதுடன் முதற்கட்டமாக 75 ஆயிரம் ரூபா பணத்தினை யுவதிக்கு தாய்தமிழ் பேரவையினர் வழங்கியுள்ளார்கள்.
வீட்டிற்கு சென்ற தாய்த்தமிழ் பேரவையின் நிறுவுனர் மற்றும் இணைப்பாளர்கள் யுவதியுடன் கலந்துரையாடி யுவதியின் நிலை அறிந்து குத்துச்சண்டையில் யுவதி கலந்துகொள்வதற்கான பண உதவிகளை வழங்க முன்வந்துள்ளார்கள். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள யுவதிகளை ஊக்கிவித்து விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்று யோகராசா நிதர்சனா தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மூன்று பேர் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

