மெரினாவில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் குவிந்தனர் : தமிழகம் குலுங்கியது

342 0

TamilNews_5030786395073ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதனால், சென்னை உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் சுமார் 25 லட்சம் பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மெரினாவில் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் திரண்டதால் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது. 4வது நாளாக நேற்று மெரினாவில் அதிகாலையில் இருந்தே இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் குவிய தொடங்கினர். இவர்கள் பெரும் திரளாக கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில், அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் காலை 8 மணியில் இருந்தே, சாரை சாரையாக மெரினா கடற்கரையை நோக்கி சைக்கிள், இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்துகளில் லட்சக்கணக்கில் ஒன்று கூடினர். அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்திக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். மணல் பரப்பே தெரியாத அளவுக்கு காமராஜர் சாலை மற்றும் மெரினா கடற்கரை மக்கள் தலைகளாக காட்சியளித்தன.

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் காரணமாக மெரினாவிற்கு செல்லும் சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களே போக்குவரத்தை சரி செய்து வாகனங்கள் தடையில்லாமல் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர். எந்த வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் மெரினாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மெரினாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் நேற்று மாலை திடீரென மெரினாவிற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் தடுப்புகள் அமைத்து தடை செய்தனர். இருந்தாலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி போராட்ட களமான மெரினாவிற்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பல தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் அவர்களும் மெரினா வந்து மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  ஒரு கட்டத்தில் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டது. மெரினாவில் மட்டும் 10 லட்சம் பேருக்கு மேல் திரண்டனர்.

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 4-வது நாளாக நேற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்ந்தது. மாணவர்கள், தல்லாகுளம் துவங்கி கோரிப்பாளையம் வரை சாலையின் நடுவில் ஆங்காங்கே அமர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்போது, ‘வாடிவாசல் திறந்து, ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ்’ என்று கோஷமிட்டனர்.

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் 4வது நாளாக நேற்றும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வ.உ.சி மைதானத்துக்கு சென்று, போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாட்டு வண்டி பேரணி: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள மாத்தூரில் மாட்டுவண்டிகளில் பொதுமக்கள் பேரணி நடத்தினர். மாத்தூரில் துவங்கி வெள்ளித்திருப்பூர் வரை 3 கி.மீ. தூரம் வரை பேரணி நடந்தது. பேரணியின்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தங்களது ரேஷன் கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக அறிவித்தனர். இதில் 200 பேர் கலந்து கொண்டனர்.

திருச்சி: திருச்சி கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகே நேற்று 3-வது நாளாக ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து போராடினர். திருவெறும்பூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆடு, மாடு, கோழிகளுடன் பேரணியாக வந்தனர்.

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளை வஉசி மைதானத்தில் மாணவ, மாணவிகள் திரண்டனர். வணிகர்கள், கடைகளை அடைத்துவிட்டு பாளை மார்க்கெட் பகுதியிலிருந்து பேரணியாக வஉசி மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். இது போல, சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டதால், கேலரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலும் போராட்டம் தீவிரமடைந்தது. இளைஞர்கள் சார்பில் குளத்தூர் பஸ் நிலையம் முன்பு காளையுடன் திரண்டு வந்தனர். குளத்தூரையடுத்துள்ள வேடநத்தம் கிராமத்தில் நடந்த போராட்டத்தில் ஒரு இளைஞர் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டியபடி வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும் என கோஷமிட்டார். அவருக்கு அங்கிருந்த இளைஞர்கள் முதலுதவி செய்தனர்.

மீனவர்கள்: கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மீனவர்களும் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் குதித்தனர். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டங்களில், லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்கள் அனைத்தும் போராட்டம் நடத்துகிறவர்களின் தலைகளாகவே காட்சியளித்தன. கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும், பெரும்பாலான வாகனங்கள் இயங்காததாலும் வீட்டில் இருந்தவர்கள், வேலைக்கு செல்லாதவர்கள் என்று அனைவரும் குடும்பத்துடனும், தனித்தனியாகவும் வந்து கலந்து கொண்டனர். இதனால் தமிழகமே குலுங்கும் அளவுக்கு நேற்றைய போராட்டம் அமைந்தது. தமிழகம் இதுவரை இதுபோன்ற ஒரு போராட்டத்தை கண்டதில்லை என்றும் பெரியவர்கள் பலர் தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு அங்கேயே தங்கி இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை நிருபர்களிடம் பேசினார். அப்போது, “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசர சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும். அதன்படி இன்னும் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும். அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். டெல்லியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய தகவல்கள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், முதல்வரின் இந்த அறிவிப்பை போராட்ட மாணவர்கள் ஓட்டுமொத்தமாக ஓரே குரலில் நிராகரித்தனர்.

இதுபற்றி மெரினாவில் போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள் கூறும்போது, “டெல்லியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசே அவசர சட்டம் இயற்றும் என்று கூறியுள்ளார். ஏன், அவர் டெல்லி செல்வதற்கு முன்பே சென்னையில் இருக்கும்போது தமிழக அரசால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சட்டம் இயற்ற முடியும் என்பது தெரியாதா? இன்னும் எத்தனை நாட்கள் தான் தமிழக மக்களை இவர்கள் ஏமாற்றுவார்கள். முதலில் டெல்லி சென்று பிரதமரிடம் அவசர சட்டம் இயற்ற வலியுறுத்த செல்கிறேன் என்றார். இப்போது தமிழக அரசே இயற்றும் என்கிறார். இதுபோன்ற அறிவிப்பை இனியும் நம்ப தயாரில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வரையும், வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடும் வரையும் எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர். இதனால், சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.