சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்ததாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட 35 வயதான யுவராஜ்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
அணியும், கேப்டனும் நம் மீது நம்பிக்கை வைக்கும் போது எப்போதும் தன்னம்பிக்கை வந்து விடும். என் மீது விராட் கோலி நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்.
இதே போல் சக வீரர்களும், முன்பு போல் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறார்கள். அது தான் இங்கு முக்கியம். எனது திறமையை நிரூபித்து, அந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்.
ஒரு கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாமா என்று சிந்தித்தேன். அதில் இருந்து மீண்டு இந்த பயணத்தை தொடருவதற்கு நிறைய பேர் எனக்கு உதவிகரமாக இருந்தனர்.
அதனால் நம்பிக்கையோடு தொடர்ந்து கடினமாக உழைத்தேன். காலம் கனியும் என்பதை அறிவேன்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய முதல் 2-3 ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது.
உடல்தகுதியை தக்க வைக்க முன்பை விட அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருந்தது. அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தேன்.
இருப்பினும் மனம் தளரவில்லை. உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி நிறைய ரன்கள் குவித்தேன். அதன் பலனாக அணிக்கும் திரும்பி விட்டேன்.
ஒரு நாள் போட்டியில் 150 ரன்களை எட்ட வேண்டும் என்பது எனது கனவு. இது தான் எனது அதிகபட்ச ரன்னாகும்.
அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சதம் கண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இதே போன்று பங்களிப்பு அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.
உடல்தகுதியை பேணுவதற்கு உணவுகட்டுப்பாடு அவசியமாகும். 30 வயதை கடந்து விட்டாலே உடல்தகுதி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர், அனில் கும்பிளே போன்ற சீனியர்களிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்.
இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.