நிபுணரின் அறிக்கையில் கண் வைத்திய மாஃபியா அம்பலம்

201 0

கிளிநொச்சியில் உள்ள ஓர் ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனையை மேற்கொண்ட தனியார் கண் வைத்திய நிறுவனம் ஒன்று,  71 மாணவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து, அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தமது வைத்திய நிலையத்துக்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த மேலதிகப் பரிசோதனையில் 10 மாணவர்களைத் தவிர, ஏனைய 61 மாணவர்களுக்கும் கண்ணில் பாதிப்பு  உண்டு எனவும் இவர்கள் மூக்குக் கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்றும் அந்நிறுவனத்தினரால் தெரிவிக்கப்பட்டு, கண்ணாடிகளின் விலைகளும் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இது  தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில், நடவடிக்கையில் இறங்கிய சுகாதாரப் பிரிவினர், அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி, படிப்படியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

71 மாணவர்களில்  வருகை தந்த  55 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 மாணவர்களுக்கு  கண்ணில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனவும் ஏனைய 17 மாணவர்களுக்கு கண்ணில் சிறு குறைபாடுகள் இருப்பதாகவும் மாவட்ட கண் வைத்தியர் அறிக்கையிட்டிருந்தார் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்

எனவே, இதன்மூலம் தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏழை மாணவர்களை மேற்படி நிறுவனம் பயன்படுத்தியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, இவ்விடயம் தொடர்பில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வழிசமைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்