சேதன விவசாயத் திட்டத்தால் 32 வருடகால எனது அரசியல் வாழ்க்கை சீரழிந்து விட்டது – மஹிந்தானந்த

202 0

பெரும்போக விவசாயத்தில் சேதன விவசாயம் திட்டம் தொடர்பில் விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு நியாயமற்றது என கருதவில்லை. இத்திட்டத்தை செயற்படுத்த முனைந்ததால் எனது 32 வருடகால அரசியல் வாழ்க்கை சீரழிந்துள்ளது.

நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலனை கருத்திற் கொண்ட சேதன பசளை திட்டத்தை முன்னெடுத்து செல்ல ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் முழுமையான ஆதரவினை வழங்குவேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சில் இடம்பெற்ற விவசாய அமைப்பின் தேசிய தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பெரும்போக விவசாயத்தில் இரு தரப்பிலும் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. சிறுபோகத்தில் அத்தவறுகளை திருத்திக் கொள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அரசி இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரிசி இறக்குமதிக்கு தனிப்பட்ட முறையில் நான் இணங்கவில்லை.சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த இவ்வாறான தீர்மானம் எடுத்துள்ளதால் நெல்லுக்கான நிர்ணய விலை குறைவடையலாம்.

அதனை தடுப்பதற்காகவே அரசாங்கம் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 75 ரூபா நிர்ணய விலையை வழங்க தீர்மானித்தது.50 ரூபாவாகவிருந்த நெல்லுக்கான உத்தரவாத நிலையை 75 ரூபா வரை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இச்சந்திப்பில் 25 மாவட்டங்களிலும் இருந்து தேசிய விவசாய தொகுதி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். பெரும்போக விவசாயத்தில் நாடுதழுவிய ரீதியாக 40 சதவீதம் தொடக்கம் 50 சதவீதம் வரையில் நெல் விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதிநிதிகள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

பெரும்போகத்தில் 6 மாத காலத்திற்கு தேவையான நெல் விளைச்சல் கிடைக்கப் பெறும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

பெரும்போக விவசாயத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிர்ச்செய்கை தொடர்பில் மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அரசாங்கத்தின் கொள்கைக்கமைய சேதன பசளை திட்டத்தை செயற்படுத்தும் போது திட்டமிட்ட வகையில் தடைகள் ஏற்பட்டன.

சேதன பசளை திட்டம் தோல்வி என்பதை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு முன்னிலையானவர்களுக்கு 3 இலட்சம் வரை வழங்குவதற்கு ஒரு தரப்பினர் தயாராக இருந்ததாக பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் சவால்மிக்கது. திட்டத்தை செயற்படுத்தும் போது விவசாயத்துறை அமைச்சர் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்.

திட்டமிட்ட வகையிலான தடைகளின் பிரதிபலனாக ஏற்பட்ட விமர்சனங்கள் கவலைக்குரியது என தேசிய விவசாய தொகுதி அமைப்பின் தலைவர் பிரேமரத்ன குறிப்பிட்டார்.

இரண்டு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான ஏக்கர் விவசாய காணிகளில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு துப்பாக்கி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெரும்போக விவசாயத்தில் சேதன விவசாயம் குறித்து விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றது என ஒருபோதும் கருத மாட்டேன்.

சேதன பசளை திட்டத்தை செயற்படுத்த முனைந்ததால்  32 வருட கால அரசியல் வாழ்க்கை சீரழிந்துள்ளது.

நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்ட சேதன விவசாய திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்றார்.