பொலிஸ் உத்தியோகத்தர் கொலை – சந்தேகநபர்கள் பிணையில் விடுவிப்பு

200 0

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவருக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சிலரால் கடத்தி கொல்லப்பட்ட நிலையில் முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தெரிய வந்தது.

இவ்விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஆயுதக்குழுவின் உறுப்பினர்களான, மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல், அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டமாவடி களுவாஞ்சிக்குடி கல்லடி ஆகிய இடங்களில் வைத்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்திருந்தனர்.

இதனடிப்படையில் இவர்கள் குறித்தான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கினை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து நீக்குவதுடன் குறித்த வழக்கினை சாதாரண தண்டனைச்சட்ட கோவையின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதாக உயர்நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் குறித்த சந்தேக நபர்கள் சார்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த பிணை மனுவானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரையும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா அனுமதியளித்துள்ளார்.