பாரம்பரிய வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?- கிராம மக்கள் எதிர்பார்ப்பு

340 0

நரியின் முகத்தில் விழித்தால் யோகம் என்று கூற கேட்டு இருப்போம். அதையே ஒரு பொங்கல் விழாவாக சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன் பாளையம், கொட்டவாடி, ரங்கனூர், மத்தூர், பெரியகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், மார்கழி மாதத்தில் பயிர்களை அறுவடை செய்த பிறகு, தை மாதத்தில் புதிய சாகுபடி செய்வதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருவதால், ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தி, பொங்கல் பண்டிகையை நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில், இந்த பகுதியில் உள்ள கிராமங்களில், நரி பொங்கல் நடத்தும் வினோத பாரம்பரியம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி கரி நாள் அன்று மாலையில் கிராம மக்கள் கிராமத்தையொட்டி உள்ள தரிசு நிலங்கள் மற்றும் கரட்டு பகுதிகளில் வலைவிரித்து வைத்து விட்டு வருவது வழக்கம். அன்று இரவோ, அடுத்த சில நாட்களிலோ அந்த வலையில் வங்கா நரி பிடிபட்டால் அன்றைய தினமே அந்த கிராமத்தில் வங்கா நரி பொங்கலாக கொண்டாடப்படுகிறது.

அவ்வாறு பிடிபடும் வங்கா நரியை கிராம மக்கள் மாரியம்மன் கோவில் வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்து குங்குமத்தால் அலங்கரித்து காலில் கயிற்றை கட்டி சிறிது தூரம் ஓட விடுவார்கள். பின்னர் கிராம மக்களுக்கு நரியை காண்பிப்பார்கள். இறுதியாக அந்த நரியை பிடித்த நிலப்பகுதிக்கே கொண்டு சென்று விடுவது வழக்கம் ஆகும்.

வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்த நரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறியை வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால், கடந்த சில ஆண்டாக வனத்துறை அபராதம் விதித்து வருகிறது.

கடந்த ஆண்டு வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படுமென வனத்துறை கடுமையாக எச்சரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வாழப்பாடி பகுதி கிராமங்களில் 100 ஆண்டுகளாக முன்னோர்கள் வழியாக தொடர்ந்து நடந்து வரும் பாரம்பரிய விழாவாக நடந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டு மறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சின்னமநாயக்கன் பாளையம், ரங்கனூர் மற்றும் கொட்டவாடி கிராம மக்கள் கூறியதாவது:-

வங்காநரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் விலங்கு அல்ல. கிராமப்புற தரிசு நிலங்களிலும், சிறு கரடுகள், நீர்நிலையொட்டிய புதர்களிலும் வாழும் சிறு விலங்கு. இந்த வங்காநரியை பிடித்து எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், கோவில் மைதானத்தில் கூடியிருக்கும் மக்களின் முகத்தில் காண்பித்து விட்டு, மீண்டும் அந்த நரியை அதன் வாழிடத்திலேயே விட்டு விடுவோம். பொங்கல் பண்டிகைதோறும் வங்காநரியை பிடித்து வந்து மக்களுக்கு காண்பித்த பிறகு, உள்ளூர் தரிசு நிலங்கள், வனப்பகுதியில் விடுவதால், வாழப்பாடி பகுதி கிராமங்களில் வங்கா நரிகளின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது.

எனவே, எங்களது கோரிக்கையை ஏற்று, 100 ஆண்டுகளாக சடங்கு சம்பிரதாயமாக தொடர்ந்து வரும் இந்த பராம்பரிய விழா தொடர்ந்து நடைபெற, தமிழக அரசு வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அனுமதியளிக்க வேண்டும். அபராதம் விதிப்பதையும் வழக்கு பதிவு செய்வதையும் வனத்துறை கைவிட வேண்டும்’.

இவ்வாறு அவர்கள் கூறினர்.