சர்வதேச நாணய நிதியத்தின் சான்றுக்கு அமையவே சர்வதேச முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பை பெறலாம் – டப்ளியூ.ஏ.விஜேவர்தன

238 0

இலங்கை கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நிலையில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வது சவாலான விடயமாகும்.

சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் சான்றுக்கு அமையவே  சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரும், நிபுணருமான டப்ளியூ.ஏ.விஜேவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் கடன் நெருக்கடிகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கடன் நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் அதற்கான தீர்வுகள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் மாற்று வேலைத்திட்டமொன்று கைவசம் இருக்கின்ற நிலையில் அந்த திட்டம் ஆரோக்கியமானதாக தென்படுகின்ற நிலையில் உடனடியாக அதனை கையாள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும். சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று கடன் சலுகைகளையும்,  சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொண்டால் இலங்கையில் முதலீடுகளை முன்னெடுக்க சர்வதேச முதலீட்டாளர்கள் முன்வருவார்கள்.

சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் சான்றுக்கு அமைய சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலமாக எமது வெளிநாட்டு கையிருப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.  இது எமது கையிருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதியை மேலும் அதிகரித்துக்கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

ஆகவே இன்று சகல விதத்திலும் நாம் நெருக்கப்பட்டுக்கொண்டுள்ள நிலையில், கடன் பொறிக்குள் தெரிந்தே விழுந்துகொண்டுள்ள நிலையில் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன் மூலமாக மட்டுமே எமக்கு தீர்வு கிடைக்கும்.

அதனை அரசாங்கம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல இதனை விடுத்து மாற்று வழிமுறை ஒன்றினை இப்போதுள்ள நிலைமையில் எம்மால் கையாள முடியாது.

இப்போது எமக்கான செலவுகளை கையாள எமது வளங்களை, கையிருப்புகளை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கடன்களை செலுத்தவும், நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் இறக்குமதி செய்யவும் எம்மால் முடியாமல் உள்ளது.

இவற்றை சமாளிக்க எமது சொத்துக்களையும், வளங்களையும் நீண்டகால குத்தகைக்கு  அல்லது முழுமையாக விற்கும் நடவடிக்கைகளை எடுப்பது எமது பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல. இப்போதே எமது கையிருப்பு குறைவடைந்துள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் மிகவும் மோசமான நிலைமைகள் நாட்டுக்குள் உருவாகும்.

வறுமை மட்டுமல்லாது வேறு பல சமூக பிரச்சினைகளும் உருவாகும். ஆகவே அவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு தீர்மானங்கள் மோசமானதாகவோ பலவீனமானதாகவோ அமைந்துவிடக்கூடாது.

அதேபோல் மக்கள் சகலரும் இப்போதில் இருந்தே சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.