கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மற்ற இடங்களைப் போல சிறைச்சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கி உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது தமிழக சிறைகளில் பார்வையாளர்களை சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பார்வையாளர்கள் வழக்கம் போல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நோய் பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கைதிகளுடன் அவர்களது உறவினர்கள் வீடியோ காலில் பேசுவதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் செய்து வருகிறது. இதன் மூலம் கைதிகளை பார்ப்பதற்கு உறவினர்கள் நேரடியாக சிறைக்கு வருவது தவிர்க்கப்படும் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறைகளில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு வாரத்தில் 2 முறை அனுமதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மற்ற இடங்களைப் போல சிறைச்சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சிறை கைதிகள், பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 15 ஆயிரம் பேருக்கு சிறைகளில் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

