தனிநபர் குழுக்கள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், அறக்கட்டளையினர், பொது மற்றும் தனியார் நிறுவனத்தினர் நமக்கு நாமே திட்டத்தின் பயனை பெற முடியும்.
கடந்த, 1997-1998ல் ‘நமக்கு நாமே’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 2001-2002ல் கிராம ‘தன்னிறைவு திட்டம்‘ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. மீண்டும் 2007-2008ல் ‘நமக்கு நாமே’ திட்டம் என புதுப்பிக்கப்பட்டு 2011 வரை தொடர்ந்தது. தற்போது மீண்டும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தனிநபர் குழுக்கள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், அறக்கட்டளையினர், பொது மற்றும் தனியார் நிறுவனத்தினர் இத்திட்டத்தின் பயனை பெற முடியும். மேற்கொள்ளப்பட உள்ள பணியில் மூன்றில் ஒரு பங்கு தொகையை பங்களிப்பு தொகையாக வழங்க சம்மதம் தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஊரகப்பகுதிகளில் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பணி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி கட்டிட பராமரிப்பு, சுற்றுச்சுவர், சுற்றுவேலி அமைப்பது, சமுதாயக்கூடம் கட்டுவது, சமையல் கூடம் கட்டுவது, விளக்கு கம்பம் பொருத்துவது, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் கூடைப்பந்து மைதானங்கள் அமைப்பது என்பது உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே கிராம ஊராட்சி நிர்வாகங்கள், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் இத்திட்டத்தில் பெரியளவில் பங்கேற்க ஏதுவாக பொதுமக்களோ அல்லது பணிக்கான பங்களிப்பை அளித்தவர்களோ, தாங்களாகவே அப்பணிகளை செய்ய விரும்பினால் அதை விண்ணப்பிக்கும் போது எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
பணியின் மதிப்பீட்டில் பொதுமக்களின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கு மேல் இருந்தால் பங்களிப்போரின் தகுதி, திறமையை கருத்தில் கொண்டு ஒப்பந்தப்புள்ளியின்றி பங்களித்தவரையோ அல்லது அவர்களின் முகவரையோ பணி செய்ய அனுமதிக்கலாம் எனவும் வழிகாட்டப்பட்டுள்ளது.

