எமது ஆட்சி காலத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை – மைத்திரி

266 0

தங்களது ஆட்சி காலத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திப்பு ஒன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என்பன தற்போது பாதிப்படைந்துள்ளன.

சுமார் 5 வருடங்கள் தான் ஜனாதிபதியாக சேவையாற்றியதோடு குறித்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை.

அதேபோன்று சில கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் தெளிவுப்படுத்தி அவ்வாறு செயற்பட முடியாது என அறிவித்தமையை அடுத்து அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சகல நிறுவனங்களும் ஒவ்வொரு நாட்டினதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமையவே உதவி செய்கின்றன.

கடந்த காலத்தில் விதிக்கப்படாத நிபந்தனைகள் தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வாறு விதிக்கப்படுகின்றது என்று தெரியாது.

இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் மேற்கத்தேய நாடொன்றின் தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றின் ஊடாகவே உதவிகள் வழங்கப்படும் என குறித்த தூதுவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான நாடுகள் ஒரு நாட்டினது ஜனநாயகம், மனித உரிமைகள், நீதிமன்றின் சுயாதீன தன்மை மற்றும் காவல்துறையின் சுயாதீன தன்மை என்பவற்றை கருத்தில் கொண்டே உதவிகளை வழங்குகின்றன.

இந்த காரணங்கள் மாத்திரமின்றி மேலும் பல காரணங்களை கருத்தில் கொண்டே அவ்வாறான நாடுகள் உதவுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.