ஜவுளிகள் மீதான ஜி.எஸ்.டியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு ஓ.பி.எஸ். கடிதம்

285 0

தமிழ்நாடு விசைதறி சங்கங்களின் கூட்டமைப்பு ஜி.எஸ்.டி. வரியை முந்தைய நிலையில் உள்ள 5 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.

மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித் துறை மந்திரி பியூஸ் கோயலுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் ஜவுளி தொழில், நாட்டின் பொருளாதாரத்திற்கு போதுமான சதவீத பங்களிப்பை அளித்து வருவதையும், மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவனியை தவிர கணிசமான வருவாய் ஈட்ட உதவுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

தொழில்துறை வளர்ச்சியிலும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பிலும் ஜவுளி துறை முன்னோடியாக உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று நோய் மற்றும் பருத்தி நூல் விலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய உயர்வு ஆகியவற்றால் இந்த தொழில் மிகுந்த இன்னல்களையும், சவால்களையும் சந்தித்து உள்ளது.

கடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மற்றும் ஆடை பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

வரி கட்டமைப்பை சரி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. வருகிற 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள சிறு-குறு மற்றும் நடுத்தர அளவிலான ஜவுளி ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வாழ் வாதாரத்தை இழக்க வழிவகுத்து உள்ளது.

இந்த நடவடிக்கைகளால் நுகர்வோருக்கு விலைகளை உயர்த்த வேண்டும். பணவீக்கத்தை அதிகரிக்கும். தமிழ்நாடு விசைதறி சங்கங்களின் கூட்டமைப்பு ஜி.எஸ்.டி. வரியை முந்தைய நிலையில் உள்ள 5 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.

எனவே இந்த விவகாரத்தை மத்திய நிதி அமைச்சகத்துக்கு கொண்டு சென்று ஜவுளி மற்றும் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு உள்ளார்.