இலங்கையில் மக்கள் பட்டினியில் அமைச்சர்கள் வெளிநாட்டுச் சுற்றுலா பயணத்தில் -காவிந்த ஜயவர்தன

182 0

நத்தார் மாதம் என்பது உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். இருப்பினும் இம்மாதத்தில் இலங்கையர்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்கொண்டுசெல்லமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை வழங்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் ஆளுந்தரப்பின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது விடுமுறையைக்கழிப்பதற்கு குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது ஏற்புடையதல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நத்தார் மாதம் என்பது உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். இருப்பினும் இம்மாதத்தில் இலங்கைவாழ் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்கொண்டுசெல்லமுடியாத அளவிற்கு மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள்.

அத்தியாவசியப்பொருட்களின் சடுதியான விலையேற்றம் காரணமாக மக்களின் வாழ்க்கைச்செலவு வெகுவாக உயர்வடைந்திருக்கின்றது. எவ்வித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமின்றி இரசாயன உர இறக்குமதியைத் தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டின் தேசிய உணவுற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சந்தை நிரம்பல் மரக்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களுக்கான மக்களின் கேள்வியை ஈடுசெய்வதற்குப் போதுமானதாக இல்லாததன் காரணமாக அவற்றின் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ளன. இந்நெருக்கடிக்கு மத்தியில் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் பல குடும்பங்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது விடுமுறையைக்கழிப்பதற்கு குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் ஒருபுறமிருக்க, மறுபுறம் பால்மா உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குழந்தைகளுக்கு அவசியமான பால்மாவைப் பெற்றுக்கொடுக்கமுடியாத அரசாங்கம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘கழிவு’ உரத்திற்காக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்குத் தயாராக இருக்கின்றது. அதேபோன்று நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தினால் குறைந்தபட்சம் சமையலறையின் பாதுகாப்பைக்கூட உறுதிசெய்யமுடியவில்லை.

எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காததன் விளைவாக நான்கு பிள்ளைகளின் தாயொருவர் பரிதாபகரமாக உயிரிழந்திருக்கின்றார். நேற்று முன்தினம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 24 எரியாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இன்னமும் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் ஏன் உரிய தீர்வை வழங்கவில்லை? இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈட்டை அரசாங்கம் வழங்குமா? பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய நட்டஈடு வழங்கப்படுமா? இதற்காகக் குழுவொன்றை அமைப்பதனால் எவ்வித தீர்வும் கிட்டப்போவதில்லை.

மாறாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பிலிருப்பவர்கள்,  பாராளுமன்றக்கூட்டத்தொடரை ஒத்திவைத்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டார்கள்.

மேலும் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கடன்தரப்படுத்தல் நிறுவனத்தின் அறிவிப்பின்படி கடன் மீளச்செலுத்துகை ஆற்றலில் ‘சிசிசி’ நிலையிலிருந்த இலங்கை தற்போது ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய வங்கி ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் அப்பதவிக்கான சம்பளம், ஓய்வூதியம், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தகாலத்தில் பெற்ற பணம் உள்ளடங்கலாக மக்களின் பணத்தைத் திரட்டி, சுகபோகமாக வாழ்க்கை நடத்துகின்றார்.

இவ்வனைத்து நெருக்கடிகளுக்கும் அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைக் காரணமாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.  உரப்பிரச்சினையோ அல்லது எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களோ கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படவில்லை.

ஆனால் இப்பிரச்சினைகளை உரியவாறு முகாமை செய்யாத அரசாங்கம், கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியையும் உரியமுறையில் கையாளவில்லை என்பது வெளிப்படையான உண்மையாகும்.

பால்மாவிற்குத் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார். அரசாங்கத்தில் அவரைப்போன்று பொய்யான கருத்துக்களைக் கூறுபவர்கள் வேறெவரும் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. ஏற்கனவே குடும்பமொன்று வாழ்வதற்கு 2,500 ரூபா போதுமானது அவர் கூறியிருந்தார்.

தற்போது பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று காண்பிக்கக்கூடியவகையில் அனைத்தையும் தயார்செய்துவிட்டு, அதன் பின்னர் கடைகளைப் பார்வையிடுவதற்கு அமைச்சர் பந்துல குணவர்தன செல்கின்றார்.

அவர் கடைகளுக்குச் செல்லும்போது அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பால்மா, அவர் வெளியேறியவுடன் பதுக்கப்படுகின்றது. ஆகவே நாட்டுமக்களை ஏமாற்றும் நோக்கில் ஊடகங்களின் முன்நிலையில் இத்தகைய நாடகங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.