சமூக வலைதளத்தில் அவதூறு தகவல்- யூடியூபர் சாட்டை முருகன் திருச்சியில் கைது

216 0

வீண் அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இதில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் பூந்தமல்லி ஜமீன் கொரட்டூரில் உள்ள தனியார் மரைன் என்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு அந்த விடுதியில் உணவு சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை கண்டித்து நேற்று முன்தினம் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் டுவிட்டரில் தரமற்ற உணவு சாப்பிட்ட 4 பெண்கள் பலியாகியுள்ளனர் என பதிவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மீண்டும் சிறிது நேரத்தில் 9 பெண்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். சாட்டை முருகனின் மேற்கண்ட பதிவால் போராட்டம் தீவிரம் அடைந்தது. சுமார் 14 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நீடித்தது. ஆனால் உணவு சாப்பிட்டு யாரும் இறக்கவில்லை.

இதையடுத்து வீண் அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்று மாலை திருச்சி சண்முகா நகரில் வீட்டில் இருந்த அவரை காஞ்சிபுரம் போலீசார் பிடித்தனர்.

இதையடுத்து அவரின் மனைவி மாதரசி (வயது 34) நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபுவுடன் திருச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் தனது கணவரை 7 பேர் கொண்ட போலீஸ் குழு கைது செய்து அழைத்து சென்றது. ஆனால் அவரை எங்கு வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. அவருக்கு தற்போது உடல் நிலை சரியில்லை. அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. ஆகவே தனது கணவரை தேடி கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இதற்கிடையே இரவோடு இரவாக சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரை முருகனை காஞ்சிபுரம் அழைத்து சென்ற தகவல் பின்னர் வெளியானது. இன்று (திங்கட்கிழமை) அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர் மீது ஏற்கனவே அவதூறு தகவல்கள் பரப்பியதாக பல மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ள சாட்டை துரைமுருகன் மீண்டும் அவதூறு பரப்பி போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.