8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

167 0

குற்றாலம் அருவிகளில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் 16-ந்தேதி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அரசு எடுத்த துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை படிப்படியாக திறக்கப்பட்டன.

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு சீசன் காலத்தில் அனுமதி வழங்கப்படாததால் சீசனை நம்பி இருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

தற்போது தொற்று பரவல் மிகவும் குறைந்து விட்ட நிலையில் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனையொட்டி கடந்த ஒரு வாரமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அருவிக்கரைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இடைவெளி விட்டு வட்டங்கள் வரையப்பட்டன.
சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நிற்கும் சுற்றுலா பயணிகள்

ஒரே நேரத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அருவிக்கரைகளில் இன்று காலை முதலே பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். சமூக இடைவெளியை கடை பிடிப்பதை கண்காணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அருவிக்கரைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த சானிடைசரை கொண்டு கை கழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க தனி குழு அமைக்கப்பட்டு அதன்பின்னரே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.