மீண்டும் போராட்டத்துக்கு ஆசிரியர் சங்கம் முஸ்தீபு

277 0
எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சம்பள முரண்பாடு மற்றும் அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் 6 மாத காலத்துக்குள் தீர்வு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட மாகாண அதிபர்கள், ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடு மற்றும் அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, அதிபர், ஆசிரியர்கள் கடந்த மாதங்களில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.