மேல்மருவத்தூரில் நம்மைக் காக்கும் 48 திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

301 0

மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும்-48 திட்டம் குறித்த கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி காவேரி மெடிக்கல் சென்டர், கரூர் அமராவதி மருத்துவமனை, திருநெல்வேலி கேலக்சி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் காணொலி காட்சி வாயிலாக “இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் இணைக்கப்பட்டன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48 திட்டத்தை 609 மருத்துவமனைகளில் தொடங்குவதன் அடையாளமாக 18 மருத்துவமனைகளின் பிரதிநிதிகளிடம் அதற்கான கடவுச் சொற்களை வழங்கி, இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காணொலி குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும்-48 திட்டம் குறித்த கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.

48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின்வரும் மூன்று வழிகாட்டுதல்களின்படி சிகிச்சைகள் வழங்கப்படும்.

1. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.

2. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம்.

3. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சையை பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.

இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து விவரங்களை மருத்துவமனை, அவசரகால ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.