தமிழ்த்திறன் மாநிலப் போட்டி யேர்மனி 2021.

1019 0

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தினால் , யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டி சென்ற வருடம் கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாகத் தடைப்பட்டிருந்தது தெரிந்த விடயமே.

இந்தவருடமும் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் அதற்கான சட்ட, பாதுகாப்பு விடயங்களை தீவிரமாக முன்னெடுத்தபடி தமிழ்த்திறன் மாநிலப்போட்டி யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அந்த வகையில், யேர்மனியில் கனோவர், கிறீபில்ட், வூப்பெற்றால், புறுக்ஸ்சால், நுர்ன்பேர்க் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் யேர்மனி முழுவதும் உள்ள தமிழாலயங்களிலிருந்து 600க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் 1380 போட்டிகளில் பங்குபற்றி தமது தமிழ்த்திறனில் உள்ள திறமைகளைப் பதிவுசெய்தனர்.

இவர்களை 120 தமிழாலய ஆசிரியர்கள் நடுவம் செய்து திறமையாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஐந்து மண்டபங்களிலும் மாணவர்களுடன் பெற்றோர்களும் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர் ஒவ்வொரு நிலையத்திலும் நடைபெற்ற ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று நிலைகளைப் பெறும் மாணவர்கள் 19.02.2022 சனிக்கிழமை கிறீபில்ட் நகரில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்குபற்றுவர்.