முன்னாள் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் அளித்த புகாரை அடுத்து, அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை – குன்னத்தூர் சாலை, ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் திருமலைமூர்த்தி. பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், திருமலைமூர்த்தி மீது அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தனர். மேலும், ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், திருமலைமூர்த்தி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் திருமலைமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

