முள்ளியவளை காவல்துறையினரால் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு!

132 0

முள்ளியவளை காவல்துறையினரால்  மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள 11 பேருக்கு நீதிமன்றால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வருடந்தோறும்  21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பதினெட்டு பேருக்கு கார்த்திகை 20 ஆம் திகதி முதல் 30 ம் திகதி வரை  தமது காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான தடையுத்தரவை  முள்ளியவளை காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் முள்ளியவளை காவல்துறையினரினால் இன்று மாங்குளம்  நீதிமன்றில் ஏஆர் 869/21 வழக்கினூடாக முள்ளியவளை காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பதினொரு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில்  கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் திருச்செல்வம் இரவீந்திரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கனகையா தவராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், இரத்தினம் ஜெகதீஸ்வரன் , தவராசா அமலன், சமூக செயற்பாட்டாளர்களான சுமித்கட்சன் சந்திரலீலா, காளிமுத்து சண்முகலிங்கம்,இராசசேகரம் இராசம்மா,பகீரதன் ஜெகதீசன், ஞானதாஸ் யூட்பிரசாத் ஆகிய பதினொரு  பேர் மற்றும் இவர்களது  குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.