செவ்வாய் கிரகத்திலா நிவாரணம் பெறுவது?

170 0

வருமானம் இன்றி நாட்டை முன்னேக்கிக் கொண்டுசெல்ல முடியாத நிலையில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் கணிசமான அளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், அந்த நிவாரணத்தை செவ்வாய் கிரகத்தில் இருந்தா பெறுவது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சி ஊடகச் செயலாளரும், அக்கட்சியின் பட்டிருப்புத் தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ சமர்பித்த 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பாக நேற்று (15) கருத்து வெளியிடுகையிலேயே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில், “வரவு இல்லாத செலவுகளே அதிகமாக இந்த பட்ஜெட்டல் உள்ளதை அவதானிக்க முடிகிறது. நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், வறுமைக்கோட்டில் வாழும் பட்டினிகளாலும் பாதிக்கப்படும் நிலையை இந்த வரவு -செலவுத்திட்டத்தை அவதானிக்கும்போது நன்கு விளங்குகிறது.

“இலங்கை சுதந்திரம் 1948ஆம் ஆண்டில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு வரை 75 வரவு – செலவுத்திட்ட உரைகள் பல நிதி அமைச்சர்களால் இலங்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டிருக்கின்றன.

“ஆனால், இந்த 76வது வரவு – செலவுத்திட்ட உரை மட்டுமே சரித்திரத்தில் நிதி அமைச்சர் நான்கு விதமாக, தமது உரையை அவஷ்தைப்பட்டு வாசித்துள்ளமையை காணமுடிந்தது.

“முதலாவதாக நின்றும், இரண்டாவதாக இருந்தும், மூன்றாவதாக ஓய்வெடுத்தும், நான்காவதாக மாத்திரைகளை விழுங்கியும் வாசிக்கப்பட்ட ஒரு சாதனை வரவு -செலவுத்திட்ட உரையாக இது இருந்ததை அவதானிக்க முடிந்தது.

“நிதி அமைச்சர் உரை சாதனையாக இருந்தாலும் உள்ளடக்கம் அவ்வாறானதாக இருந்ததா என்றால் இல்லை என்பதே பலரின் அபிப்பிராயங்களாக உள்ளன.

“நாட்டின் வருமானம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், வருமானம் இன்றி நாட்டை முன்னேக்கிக் கொண்டுசெல்ல முடியாத நிலையில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் கணிசமான அளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாலும் நிவாரணத்தை செவ்வாய் கிரகத்தில் இருந்தா பெறுவது” எனவும் மேலும் கூறினார்.