கடந்த 3 மாதங்களில் 600 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டின் பாதுகாப்பு நிலவரமும் மேம்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், ஆகஸ்ட் 30 ஆம் தேதி காபூல் சர்வதேச விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி ஐஎஸ் தீவிரவாதிகள் தலிபான்களுக்கு சவால்விடுத்தனர். அதனைத் தொடர்ந்து மசூதிகளில் தாக்குதல், காபூல் மருத்துவமனையில் தாக்குதல் என ஆப்கானிஸ்தானின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாகிவிடக் கூடாது என்பதுதான் தலிபான்களுக்கு உலக நாடுகள் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஐஎஸ்-கோராசன்?
* ஐஎஸ்-கோராசன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய தீவிரவாத அமைப்பாகும்.
* ஐஎஸ்-கோராசன் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய தீவிரவாத அமைப்பாகும்.
* தெற்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருக்கும் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், ஒருகட்டத்தில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
* அமெரிக்க படைகளின் தாக்குதலாலும், தலிபான்களின் தாக்குதலாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர்.
* ஐஎஸ்-கோராசன் என்பது தலிபான்களை விட மிகவும் சிறிய அமைப்பாகும்.
* 1,500 முதல் 2,200 ஐஎஸ்-கோராசன் அமைப்பின் உறுப்பினர்கள் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
* சிரியா, ஈராக்கில் இயங்கி வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தானிலும் பரவினர். ஆனால் இவர்களை தலிபான்கள் கடுமையாக எதிர்த்தனர்.

