திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 10 சந்தேக நபர்களை அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனவது இன்று (29) உத்தரவிட்டார்.
தம்பலாகாமம், முள்ளிப்பொத்தானை, குளியாப்பிட்டி, வத்தளை, குருணாகல் மற்றும் அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 46, 48, 40, 38, 41, 55, 38, 54, 32 மற்றும் 43 வயதுடைய பத்துப் பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தம்பலாகாமம் ஐயனார் தீவு பகுதியில் புதையல் தோண்டிய நிலையில் தம்பலாகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடமிருந்து புதையலை கண்டறிவதற்கான ஸ்கேன் இயந்திரம், மண்வெட்டி, கூடைகள், பிக்காசு இயந்திரங்கள் போன்றவற்றினையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தம்பலாகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

