விண்வெளிக்கு ‘ரோபோ’ அனுப்ப தயாராகிறது ரஷியா

162 0

‘டெலிடிராய்டு ரோபோ’வை மானுடவியல் ‘ரோபோ’வாக உருவாக்கும் பணியை ரஷியா கடந்த மார்ச் மாதம் தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷிய விண்வெளி பயிற்சி மையம், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோதனை ரீதியில் புதிய தலைமுறை மானுடவியல் ரோபோ ‘டெலிடிராய்டு’வை அனுப்பி வைக்க உள்ளது. இதற்கான நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது. இதுபற்றி துபாயில் நடந்து வருகிற சர்வதேச விண்வெளி மாநாட்டின் இடையே ரஷிய விண்வெளி பயிற்சி மைய செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

விண்வெளியில் மனிதர்களுக்கு முற்றிலும் ஒரு மாற்றாக ‘ரோபோ’க்கள் இருக்காது. ஆனால் அவை மண்ணை சேகரிப்பது, துளையிடுவது போன்ற சில செயல்களை செய்து முடிக்கிற திறனைப் பெற்றுள்ளன. மேலும், மனிதர்கள் மிக நீண்ட காலம் இருக்க முடியாது என்ற நிலையில் ‘ரோபோ’க்களை பூமியில் இருந்து கொண்டு மனிதர்கள் நிர்வகிக்க முடியும். எனவே தற்போது உள்ள ‘ரோபோ’ மாடலை முழுமையாக மேம்படுத்துவதற்கு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ‘ரோபோ’க்கள் அனேகமாக 2024-ம் ஆண்டு வாக்கில், மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகளுடன் சுற்றுப்பாதையில் பறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டில், ரஷிய விண்வெளி பயிற்சி மையம், மானுடவியல் ‘ரோபோ’க்களை கட்டுப்படுத்துவதற்கு மனிதர்களை தயார்படுத்துவதற்கான உபகரணத்தை காட்சிப்படுத்தியது.

‘டெலிடிராய்டு ரோபோ’வை மானுடவியல் ‘ரோபோ’வாக உருவாக்கும் பணியை ரஷியா கடந்த மார்ச் மாதம் தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.