கோத்தபய ராஜபக்சேவை லண்டனில் கைது செய்ய வேண்டும்- வைகோ

138 0

ஐரோப்பியக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து, கோத்தபயவுக்கு எதிரான அறப்போரில் களம் காண வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத் தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிரமெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளை கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ம.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

2009-ம் ஆண்டு, இறுதிக்கட்டப் போரில் மட்டும், 1 லட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டதாக, ஐ.நா. மன்றம் அமைத்த மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அளித்த ஆய்வு அறிக்கை, ஆவண சான்றுகளுடன் குற்றம் சாட்டி இருக்கின்றது.

ஆனால், 12 ஆண்டுகள் கடந்தபின்னரும், இன்று வரையிலும், இனப் படுகொலையாளர்கள் மீது எந்த நடவடிக்கையையும், உலக நாடுகள் மேற்கொள்ளவில்லை. இலங்கையிலும் அத்தகைய நீதி விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இது தமிழ் இனத்திற்கு எதிரான அநீதி ஆகும்.

இந்த நிலையில், பிரிட்டனில் கிளாஸ்கோ நகரில், ஐ.நா.மன்றத்தின் சார்பில், இந்த ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு நடைபெற இருக்கின்றது. அந்த மாநாட்டில், கோத்த பய ராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகின்றது.

மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை இழைத்த கோத்தபய ராஜபக்சேவை லண்டனில் கைது செய்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும் என, ஈழத்தமிழ் அமைப்புகள் பிரிட்டன் அரசின் காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையை, ம.தி.மு.க ஆதரிக்கின்றது. ஐரோப்பியக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து, கோத்தபயவுக்கு எதிரான அறப்போரில் களம் காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.