கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி இன்று இரவு தொடக்கம்

441 0

201607101355501434_Kudankulam-2nd-nuclear-power-generation-start-tonight_SECVPFகூடங்குளம் 2-வது அணு உலையில் இன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் அணுப்பிளவு தொடங்கி மின் உற்பத்தி ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கியது. பின்பு டிசம்பர் மாதம் பராமரிப்பு காரணங்களுக்காக முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு முடிந்து பிப்ரவரி மாதம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. அந்த அணு உலையில் தற்போது 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஒப்பந்தப்படி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் தீவிரமடைந்தது. இதற்காக அணு உலையில் யுரேனியம் நிரப்பப்பட்டு, கடந்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி நீராவி பரிசோதனை கருவியில் சோதனை நடத்தப்பட்டது.

வால்வுகள் சரியாக செயல்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள திறந்து, மூடி பார்க்கப்பட்டது. திட்டமிட்டபடி இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதைத்தொடர்ந்து, அணுப் பிளவை ஏற்படுத்தி, கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் ‘கிரிட்டிகாலிட்டி’ சோதனை நடத்த சில நாட்களுக்கு முன் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்தது.

மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், கிரிட்டிகாலிட்டி சோதனை நடத்த அனுமதியளித்தனர். இந்த அனுமதியை தொடர்ந்து,2 வது அணுஉலையில் ‘கிரிட்டிகாலிட்டி’ சோதனை நடத்தும் ஆயத்தப்பணிகளில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரியாக 7.52 மணிக்கு, கிரிட்டிகாலிட்டி சோதனைக்கான முதல்கட்டப்பணிகள் தொடங்கியது. இந்த சோதனைக்களுக்கு பிறகு, அடுத்த 48 மணிநேரத்தில் அணுப்பிளவை ஏற்படுத்தி கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் ‘கிரிட்டிகாலிட்டி’ எனும் அணு பிளவு தொடங்கும். அதன்படி இன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் அணுப்பிளவு தொடங்கி மின் உற்பத்தி ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நேற்று முன்தினம் கிரிட்டிகாலிட்டி சோதனை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்குள்ளாக மின் உற்பத்தி தொடங்கும். பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 250 மெகாவாட், 500 மெகாவாட் என பல்வேறு கட்டங்களை எட்டியதும் 2 மாதத்தில் ஆயிரம் மெகாவாட் என்ற நிலையை அடையும்’ என்றார்.